மத்திய மண்டலத்தில் 170 கல்லூரிகள், 4700 கிராமங்களில் சைபர் கிரைம் கிளப்புகள் தொடக்கம்
மத்திய மண்டலத்தில் 170 கல்லூரிகள், 4700 கிராமங்களில் சைபர் கிரைம் கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆயிரம் கிராமங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.என மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பலர் தங்களின் பணத்தை இழந்துள்ளனர். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே சைபர் கிரைம் குற்றங்கள் குறைக்க முடியும். எனவே சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக பொதுக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மத்திய மண்டல ஐஜியாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்ற உடன் அனைத்து கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் சைபர் கிரைம் கிளப்புகளை அமைக்க நடவடிக்கை எடுத்தார். திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில், கிராமப்புறங்களில் வசிக்கும் முதியோர்களை குறிவைத்து நடக்கும் கொலை, கொள்ளைகளை தடுக்க கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கிராமங்களில் உள்ள முதியோர் வசிக்கும் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட எல்லையில் உள்ள போலீசார் சென்று குறைகளை கேட்பதுடன் அங்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வர போலீசாருக்கு மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.
இதன்படி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் கல்லூரிகள், தாய் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் இந்த கிளப்புகளை அமைக்க அறிவுறுத்தல் வழங்கினார். இந்த கிளப்பில் கல்லூரி மாணவர்கள், கணிணி அறிவுடைய இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கென்றுதனியாக டெலிகிராம் செயலியில் இயங்கும் குழு ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் இணை வழி குற்றங்களை தடுப்பது மற்றும் விழிப்புணர்வுடன் இருப்பது தொடர்பான தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது. குறிப்பாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி, மோசடியான தொலைபேசி அழைப்புகள், போலி வலைதளங்கள் குறித்த தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதை அந்த குழுவில் உள்ளவர்கள் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு நேரடியாக விழிப்புணர்வு கிடைக்கும். இந்த கிளப்புகளின் செயல்பாடுகள் மாவட்ட கூடுதல் எஸ்பிக்கள் மற்றும் காவல் நிலைய அளவில் 2 காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மத்திய மண்டத்தில் உள்ள மொத்தம் 170 கல்லூரிகளில் இதுரை சைபர் கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சியில் மட்டும் 35 கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 17 கல்லூரிகளில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 3121 கிராமங்களில் இதுவரை 1937 கிராமங்களில் கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 56,567 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 788 கிளப்புகளில் 39,550 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 1184 கிராமங்களில் கிளப்புகள் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது.10,557 குக்கிராங்களில் 2743 கிராமங்களில் கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 37,108 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 780 கிளப்புகளில் 23,400 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 7814 குக்கிராமங்களில் விரைவில் கிளப்புகள் தொடங்கப்படவுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க காவல்துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், காவல்துறைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் பாலியல் தொடர்பான குற்றங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் கல்லூரி, பள்ளி மாணவிகளுக்கு காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தை பொறுத்தவரையில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, விரைவில் அனைத்து குற்றங்களும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.