விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை!
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று முதல் 14 நாடகள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் 2004-ம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணிக்க விநாயகருக்கும், உச்சி பிள்ளையாருக்கும் இன்று பிரம்மாண்டமான கொழுக்கட்டை தயாரித்து மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ, உச்சிவிநாயகர் சன்னதியில் 75 கிலோ 150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்பட்டது. இதில் மக்கள் ஏராளமனோர் கலந்துக்கொண்டனர். குறிப்பாக இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது. மேலும் பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்த திருவிழா இன்று தொடங்கி 14- தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார் ,மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
#TrichyUchipillaiyartemple #150kgofcustard #GaneshaChaturthi #GaneshaFestival #14daysfestival #Trichydistrict @abpnadu pic.twitter.com/lIw2ZfBVJ7
— Dheepan M R (@mrdheepan) August 31, 2022
இதனை தொடர்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் தினமும் மாலை 4-00 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். மேலும் ஆண்டு தோறும் மெகா சைஸ் கொழுக்கட்டை தோளில் சுமந்து படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள்.
அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவிஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு பக்தர்களை அனுமதித்து மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது. மேலும் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று முதல் உச்சிபிள்ளையார் கோவிலில் விழாகோலம் பூண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கபட்டு இருந்தது. இந்த ஆண்டு கட்டுபாடு எதுவும் இல்லை என்பதால் மக்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.