Chess Olympiad 2022: திருச்சியில் நீச்சல் குளத்தில் நடந்த செஸ் போட்டி..!
44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீச்சல் குளத்தில் விழிப்புணர்வு செஸ் போட்டி நடந்தது.
தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இந்த செஸ் திருவிழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வருகை தர தொடங்கி இருக்கிறார்கள். முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மடகாஸ்கர் தீவை சேர்ந்த வீரர்கள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடுவர்கள் 90 பேர் மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். செஸ் போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதன்மை நடுவராக லாரன்ட் ப்ரைட் வந்துள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க உருகுவே, நைஜீரியா நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னை வந்தனர்.
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவற்காக, சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் செஸ் போட்டியை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று காலை விழிப்புணர்வு செஸ் போட்டி நடைபெற்றது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் அன்பு போட்டியை தொடங்கி வைத்தார். நீச்சல் குளத்தில் தண்ணீரில் இருந்தபடியே வீரர்-வீராங்கனைகள் செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற செஸ் விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாணவர்களுடன் சதுரங்கம் விளையாடி, போட்டியினைத் தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்