திருச்சி: அரியாற்றங்கரையில் உடைப்பு; விவசாய நிலங்களை சூழ்ந்த நீர்- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றபடுவதால் அரியாறுயில் கரை உடைந்ததால் விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 1.16 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களில் நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது. கடந்த 1-ந் தேதி மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2.10 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர பவானி, அமராவதி அணைகளும் நிரம்பியதால் பவானி, அமராவதி ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து காவிரியில் கலந்தது. இதனால் திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 150 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. அது அப்படியே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. பின்னர் கல்லணையில் இருந்து பாசன கால்வாய்களிலும், கொள்ளிடம் ஆற்றிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில், நவலூர் குட்டப்பட்டில் பிரிந்து அரியாற்றில் செல்லும் உபரி நீர் புங்கனூர் கலிங்கியில் வழிந்து, வயல்வெளியில் பாய்ந்து வருகிறது.
மேலும், காவிரி, பவானி, அமராவதி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரை பயன்படுத்த முடியாமல் கடலில் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக ஆற்றில் தடுப்பணைகள் கட்டி, நீருந்து நிலையம் அமைத்து அதன் மூலம் உபரிநீரை திருப்பி வறட்சி பகுதியில் பயன்படுத்தினால், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பும். லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இனியானூர் அருகில் உள்ள வர்மாநகர் செல்லும் அரியாற்றங்கரையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, அந்த பகுதியை தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் கரையையொட்டி கட்டப்பட்டுள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அரியாற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், அப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே அரியாற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தையும், தண்ணீர் வழிந்தோடிய பகுதியையும் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு, உடைப்பினை உடனடியாகச் சரிசெய்திட நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் ஜோதி, ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் வெளியேற்றப்படும் உபரி நீரால் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகளில் கரைகள் உடைந்து விவசாய நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து வருகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டு தான் வருகிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக ஏரிகள், குளங்கள், கால்வாய்களில் சுற்றி உள்ள அணைகளை சரியான முறையில் பலப்படுத்தவில்லை எனவும் தூர்வார வில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்