கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் - அர்ஜூன் சம்பத்
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து வருகிற 13-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் - அர்ஜூன் சம்பத் பேட்டி
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத் பேசியதாவது: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சமயபுரம் உள்ளூர் மக்களுக்கு கட்டணமின்றி அம்மனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறையை நிறுத்திவிட்டனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதும், சுங்கக் கட்டணம் வசூலிப்பதும் தவறான அணுகுமுறையாக உள்ளது. இந்த கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். கோவில்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். திருச்சி வாழைக்காய் மண்டி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது. திருச்சி கோர்ட்டு வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான விநாயகர் கோவில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து பூஜைகள் நடத்தவும், பக்தர்கள் வழிபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
மேலும் தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றம் தண்ணீர் வழங்க சொல்லியும் , இதுவரை முறையாக வழங்க வேண்டிய தண்ணீரை காவிரி ஆற்றில் இருந்து கர்நாடக அரசு வழங்கவில்லைட், இதனால் தமிழ்நாட்டில் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் அவதிபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள், மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் இதுவரை தமிழ்கத்திற்கு தேவையான தண்ணீரை திறக்கவில்லை. ஆகையால் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து வருகிற 13-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேலும், வருகிற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு வந்து சேரும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவாக செயல்படும். இஸ்ரேலில் நடைபெறும் போர் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றன. எனவே, மத்திய உளவுத்துறை இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவோரை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.