Ariyalur: மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர மாநில அரசு உதவி செய்யுமா?
அரியலூர் மாவட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மண்பாண்டம் செய்வதை தவிர வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. கார்த்திகை மாதத்தில் அகல் விளக்கு தயாரிப்பது, மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானைகள், சட்டிகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிப்பது ஆகியவற்றின் மூலம் இவர்களது வாழ்க்கை தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்து கொள்ள, இவர்கள் போராடி வருகின்றனர். வழக்கமாக பருவ மழை காலத்தில் இவர்கள் மண்பாண்டங்கள் செய்வதில்லை. மார்கழி மாதம் பனி பெய்யும் காலம் என்பதால் கார்த்திகை அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த பின்பு, பொங்கல் பானைகள் தயாரிக்க தொடங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் இப்பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. ஆனால் பொங்கல் பானை தயாரிக்க தொடங்கும் காலத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அவர்கள் மண்பாண்டங்களை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
மண்பாண்டம் செய்வதற்கு மண் பதப்படுத்த வேண்டும் என்றால் குறைந்தது 4 நாட்கள் நல்ல வெயில் அடிக்க வேண்டும். ஆனால் 2 நாட்கள் மழை பெய்வதும், 2 நாட்கள் வெயில் அடிப்பதுமாக இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சிரமமான சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது மழை பெய்வது சற்று ஓய்ந்துள்ள காரணத்தால், கடந்த 2 நாட்களாக அவர்கள் மண்ணை பதப்படுத்தி மண்பாண்டங்கள் செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதுவரை பொங்கல் பானைகள் செய்யும் வேலையை தொடங்கவே இல்லை. அந்த வேலையை தொடங்கியுள்ள சிலரும், குறைந்த எண்ணிக்கையிலேயே பானைகள் தயார் செய்துள்ளனர். மண் பாண்டங்களை சூளையில் இட்டு சுடுவதற்கு போதுமான அளவு பானைகள் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது இன்னும் 10 நாட்களாவது ஆகும். அதன் பிறகு சூளையில் இட்டு சுட்டு எடுக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் பானைகள் தயாராகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுபவர்களை அரசு ஊக்கப்படுத்தி, தொடர்ந்து மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்ய வைக்காவிட்டால் இந்த சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினர் மண்பாண்டம் என்ற ஒன்று இருந்ததை அறியாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. எனவே அரசு உரிய திட்டங்கள் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் காப்பதோடு, அடுத்தடுத்த தலைமுறைகளில் மண்பாண்ட தொழில் நலிவடையாமல் தொடர வழிவகை செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்