அரியலூர்: தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது - சிக்கியது எப்படி..?
அரியலூர், கடலூர் மாவட்ட கோயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 திருடர்கள் வாகன சோதனையில் சிக்கினர். அவர்களிடம் இருந்து நகை-பணம், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஊருக்கு ஒதுக்குப்புறமான கிராம கோயில்களில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருடர்களை பிடிக்க, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆலோசனையின் பேரில், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீஸ் தனிப்படையும், குற்ற புலனாய்வு துறை போலீசார் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டன. போலீசார் தொடர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று குற்றவாளிகள் தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் ஆண்டிமடம்- விருத்தாசலம் ரோட்டில் ராங்கியம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி நித்தியானந்தம் மகன் தமிழ்பாரதி(வயது 21), வேல்முருகன் மகன் விஜய் என்கிற விஜயகுமார் (20), சிறுகளத்தூர் சாமிநாதன் மகன் அன்புமணி(20) ஆகிய 3 பேரிடம் விசாரித்தபோது, அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் விசாரித்து வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது ஆண்டிமடம் போலீஸ் சரகத்தில் 4 கோயில்களிலும், ஜெயங்கொண்டம் போலீஸ் சரகத்தில் 3 கோயில்களிலும், மீன்சுருட்டி போலீஸ் சரகத்தில் 1 கோயிலிலும், தளவாய் போலீஸ் சரகத்தில் 2 கோயில்களிலும் உண்டியலை உடைத்து பணம் மற்றும் சாமி சிலைகளில் இருந்த நகைகளை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். மேலும் குவாகம் போலீஸ் சரகத்தில் 2 இருசக்கர வாகனங்களையும், உடையார்பாளையம் போலீஸ் சரகத்தில் ஒரு இருசக்கர வாகனத்தையும், கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சரகத்தில் 2 கோயில்களில் உண்டியல் மற்றும் நகைகளை திருடியதையும் ஒப்புக்கெண்டனர். கடந்த சில மாதங்களில் ஒட்டுமொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் 13 திருட்டு சம்பவங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 2 திருட்டு சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம், சாமி சிலைகளில் இருந்த தங்க தாலிகள் 52 கிராம் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அவர்கள் 3 பேரையும் ஆண்டிமடம் போலீசார் கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனிப்படை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தேவை இல்லாமல் அச்சப்படத் தேவையில்லை. சந்தேகம்படும்படி நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், தைரியமாகவும் செயல்பட வேண்டும். குறிப்பாக வீட்டில் தனிமையாக இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், எந்த சூழ்நிலையிலும் உதவிகள் தேவைப்பட்டாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.