அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அமலாக்கத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 12 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இது தமிழக அரசியலில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது. இந்த குட்கா ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டி.ஜி.பி-க்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர்மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த வருமான வரித்துறை சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து தற்போது சோதனை நடத்தி வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட அவர் மீது இருந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் அவரது குடும்பத்தினர் குவாரிகள், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு தொர்பாக சோதனை நடத்தியதும், சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை தொடங்கி உள்ளதாக என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

