நாளை ஆடிப்பெருக்கு விழா: மக்கள் மிகுந்த கவனத்துடன் கொண்டாட திருச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்
ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடுகள் செய்ய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவு.
திருச்சி மாவட்டத்தில் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை ஆற்றங்கரைகளில் கொண்டாட காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வீடுகளில் உள்ள காவிரி குடிநீர் குழாய்க்கும், ஆழ்குழாய் கிணற்றிலும் பூஜை செய்து வழிபட்டனா். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா அன்று காவிரி படித்துறைகள் களை இழந்து காணப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக திருச்சியில் அம்மா மண்டபம், கருடமண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் ஆடிப்பெருக்குவிழா சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக அம்மாமண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பக்தர்கள் அதிக அளவில் வருவார். மேலும் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்வது வழக்கம். பின்னர் காவிரி ஆற்றுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொள்வர். மேலும் திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.
மேலும் தம்பதிகள் தாலிக்கயிறும் மாற்றிக்கொள்வார்கள். இதுபோல் புதுமணத் தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொள்வார்கள். இதுபோல், திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு, திருவளர்சோலை, கம்பரசம்பேட்டை படித்துறை, திருப்பராய்த்துறை சிவன் கோவில் அருகில், தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி பரிசல் ரோடு போன்ற இடங்களில் நாளை பொதுமக்கள் அதிக அளவில் கூடி புனித நீராடுவார்கள்.
இந்தநிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி படித்துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மர்றும் அதிகாரிகள் காவிரி, அம்மா மண்டபம், உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டனர். மேலும் படித்துறைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொள்ளவும், காவிரியில் தண்ணீர் அதிகம் செல்வதால் தீயணைப்பு துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். குறிப்பாக பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் ஆடிபெருக்கு விழாவை கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்