அரியலூரில் சார் பதிவாளர் அலுவலகம் முன் விவசாயி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
அரியலூர் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகம் முன் மனைவியுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 60). விவசாயியான இவர் தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசிப்பதோடு, அருகில் உள்ள வயல்களை பராமரித்து வருகிறார். இவர் தனது பூர்வீக சொத்தை தனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் அளித்துள்ளார். அந்த சொத்து தொடர்பாக அவருக்கும், அவரது உறவினரான குஞ்சிதபாதத்திற்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கந்தவேல், அவரது மகனுக்கு அளித்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு ஆட்சேபனை இருந்தால் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் குஞ்சிதபாதம், பிரச்சினைக்குரிய அந்த சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அவரது மகனுக்கு தான செட்டில்மெண்ட் அளித்து அதனை ஆண்டிமடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தவேல், பிரச்சினைக்குரிய சொத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் எப்படி பத்திரப்பதிவு செய்து கொடுத்தீர்கள்? என்று சார் பதிவாளரிடம் கேட்டுள்ளார்.
மேலும் சரியான விளக்கம் கொடுக்கப்படாததால் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில், கந்தவேல் பெட்ரோலை வாங்கி வந்து சார் பதிவாளர் அலுவலக வளாகத்தின் முன் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனது மனைவியுடன் தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், கந்தவேலை தடுத்து அவர் மீதும், அவரது மனைவி மீதும் தண்ணீர் ஊற்றி மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் போலீசார், சட்டரீதியாக இந்த பிரச்சினையை அணுக கந்தவேலுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இதனால் ஆண்டிமடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்