புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்
புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரண், மேலும் வருகிற 31-ந்தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாலாஜி உத்தரவிட்டார்
புதுச்சேரி மங்களம் தொகுதி பா.ஜனதா மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமரன். இவர் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வில்லியனூர் பகுதியில் வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, கத்தியால் வெட்டியும் படுகொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். இந்த படுகொலை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. அந்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.@abpnadu #Trichydistrict pic.twitter.com/l6YVjsHJ3w
— Dheepan M R (@mrdheepan) March 28, 2023
மேலும் இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி திருக்கஞ்சியை சேர்ந்த நித்யானந்தம் (வயது 43), வில்லியனூர் மெயின்ரோட்டை சேர்ந்த சிவசங்கர் (23), கார்கர்டு பகுதியை சேர்ந்த ராஜா (23), கார்த்திகேயன் (23), தனத்துமேடு ஜெய்கணேஷ்நகரை சேர்ந்த வெங்கடேஷ் (25), அரியாங்குப்பத்தை சேர்ந்த சேது என்கிற விக்னேஷ் (27), கடலூர் அண்ணாநகரை சேர்ந்த பிரதாப் (24) ஆகிய 7 பேர் நேற்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் சரண் அடைந்தனர். அவர்களை வருகிற 31-ந்தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாலாஜி உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்