திருச்சி மத்திய சிறை முன்பு முற்றுகை போராட்டம்.. 64 பேர் கைது
திருச்சி மத்திய சிறையில் 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இலங்கை தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் போராட்டம்.
திருச்சி சிரப்பு முகாமில் இலங்கை தமிழரகள், நாங்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறோம். எங்களை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விடுதலை செய்ய வேண்டும், என்றனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே இலங்கை தமிழர்கள் 4 பேர் திடீரென மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோஷமிட்டபடி சிறிதுநேரம் மரத்தில் அமர்ந்திருந்த அவர்கள், பின்னர் கீழே இறங்கினார்கள். இந்நிலையில் இலங்கை தமிழர் உமா ரமணன் (வயது 41) என்பவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிறப்பு முகாம் வளாகத்தில் இருந்த வர்ணம் தீட்ட வைத்திருந்த வார்னீசை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் மற்றும் முகத்தில் தீப்பற்றிக்கொண்டது. உடனே முகாமில் இருந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். பின்பு அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஈழத்தமிழர்களிடம் தவறான செயலில் யாரும் ஈடுபடவேண்டாம், உங்களின் கோரிக்கைகளை மாநில அரசிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்நிலையில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையை உடனடியாக இழுத்து மூட வேண்டும், 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தில் தீக்குளித்த ஈழத் தமிழர் உமா ரமணன் என்பவருக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும்.
தமிழ்நாட்டை நம்பி வந்த தொப்புள் கொடி உறவுகள் மீதான அடக்குமுறையை நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷரீப், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருச்சி மத்திய சிறை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 64 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.