திருச்சி: கண்பார்வையில்லாததால் தவறுதலாக எலிபேஸ்டை சாப்பிட்டவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் , வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கண்பார்வையில்லாததால் தவறுதலாக எலிபேஸ்டை தின்றவரும் இறந்தார்.
திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பூச்சம்மாள் (வயது 60). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூச்சம்மாளின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூச்சம்மாளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு சம்பவம்: திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் கீரைத்தோட்டத்தை சேர்ந்தவர் ஞானபாபு (45). இவர் மனைவியை பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரது தாய் வீட்டைவிட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்றார்.பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஞானபாபு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு சம்பவம் : திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் (37). இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் லூயிஸ் பிரவீன் ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு சம்பவம் : திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி (72). கண் சரியாக தெரியாததால் எலி பேஸ்ட்டை தவறுதலாக தின்றுள்ளார். இதில் மயங்கிய அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்