திருச்சி: எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 2 இடங்களில் சோதனை; 25 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்தது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முதலில் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியின் கோவை இல்லத்தில் சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தெரு விளக்குகளை மாற்றும் ஒப்பந்தத்தில், எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின்படி எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. அதைபோல புதுக்கோட்டை இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. அவரது வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 8 மணி நேரமாக நடைபெற்றது.
இதையடுத்து சென்னையில் செயல்படும் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய தனியார் நிறுவனம் இந்த எல்.இ.டி. பல்புகளை சப்ளை செய்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சமிக்ஸா ஏஜென்ஸி நிறுவனத்தின் உரிமையாளர் திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் மேலரண் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீகணேசா டிரேடர்ஸ் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் ஹார்டுவேர் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 25 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தனியார் நிறுவனம் தயாரிக்கும் பல்புகள் சென்னை பகுதிக்கு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினார்கள். மாலை 4 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. பின்னர் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதைத்தவிர கோவை, சென்னை, செங்கல்பட்டு என தமிழகம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்திய இரண்டு இடங்களிலும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி முழுவது பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்