Trichy Holiday: திருச்சியில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை.. காரணம் தெரியுமா?
திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் நோக்கில் மாற்று வேலைநாட்கள் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களான சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழாக்களையொட்டி அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றும், நாளையும் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை:
விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையின்படி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று வழங்கப்பட்டுள்ள விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 29ம் தேதி சனிக்கிழமையன்று பணி நாளாக செயல்படும். இதே போன்று ஸ்ரீரங்கம அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு நாளை வழங்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்குப் மாற்றாக, மே மாதம் 13ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
தேர்வுகளுக்கு பொருந்தாது:
அதேநேரம், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும். ஆனாலும், ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கருவூலங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்கள் உடன் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
சமயபுரம் தேர்திருவிழா:
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் இந்த திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களில் இருந்தும் திருச்சியில் குவிந்துள்ளனர். இந்த தேர்த்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குவிந்த பக்தர்கள்:
கொடியேற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருவதோடு, இரவு 8 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷ வாகனம் மற்றும் மரகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து நேற்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்க அதில் அம்மன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேரோட்டத்தை காண திருச்சி,பெரும்பலூர்,கரூர்,புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் அரியலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் தூக்குவது, அலகு குத்துவது, அக்னி சட்டி ஏந்துவது போன்ற நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுமார் 15 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மாவட்ட காவல் துறை சார்பில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்
நிகழ்ச்சி நிரல்:
நாளை அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.