(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சி மாநகரத்தில் இந்தாண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 16,526 பேர் கைது
திருச்சி மாநகரத்தில் 2022-ம் ஆண்டில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 16,526 பேர் போலீசார் கைது - திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன்
திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 16,526 பேர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022-ஆம் ஆண்டில் இதுவரை தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 137 பேர்கள், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1630 பேர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட 156 பேர்கள் என மொத்தம் 1,923 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 12,085 பேர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 (3,212 பேர்கள்) மற்றும் 2021 (6,110 பேர்கள்) ஆண்டுகளை விட அதிகமாகும்.
திருச்சி மாநகரத்தில் பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், 2022-ம் ஆண்டில் 1,490 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1,208 பேர் மீது பிணைய பத்திரம் முடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 34 ரவுடிகள் உட்பட 53 பேர்கள் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறைதண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 (29 பேர்) மற்றும் 2021 (52 பேர்) ஆண்டுகளை விட அதிகமாகும். பொது இடங்களில், பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து 2022-ம் ஆண்டில் இதுவரை 16,526 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 (8,808 பேர்) மற்றும் 2021 (10,970 பேர்) ஆண்டுகளைவிட அதிகமாகும். திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய, சட்டரீதியான, கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த தகவலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்