இது தமிழ்நாட்டுக்கு புதுசு...! வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை மட்டும் தூக்கி சென்ற கொள்ளையர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நள்ளிரவில் டி.என்.பி.எல். அதிகாரி வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மரவனூர் பகுதியை சேர்ந்தவர் சாவித்ரி. ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர். இவரது மகன் மணிகண்டன் (35). மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள டி.என்.பி.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சாவித்ரி சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கி விட்டார். வேலைக்கு சென்ற மணிகண்டன், அவரது மனைவி ஜெயபிரியா ஆகியோர் நேற்று மாலை வீடு திரும்பினர். பின்னர் அவர்கள் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள ஏ.சி. அறையில் படுத்து தூங்கினர். இன்று காலையில் மணிகண்டன் எழுந்து பால் வாங்குவதற்காக உள்பக்க தாழ்ப்பாளை திறந்தார். ஆனால் கதவை திறக்க இயலவில்லை. வெளிப்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருப்பதை உணர்ந்த அவர் அருகில் வசிக்கும் நண்பரின் உதவியை நாடினார். பின்னர் அவர் வேகமாக வந்துபார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டார். பின்னர் மணிகண்டன் தூங்கிய அறையின் வெளிப்பக்க தாழ்பாளை திறந்தார்.
அதன்பின்னர் மணிகண்டன் வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து அறையில் இருந்த பீரோவை காணவில்லை. அது வீட்டிற்கு வெளியே காட்டு பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. கொள்ளையர்கள் பீரோவை அலாக்காக தூக்கி சென்று சாவகாசமாக உட்கார்ந்து அலசி ஆராய்ந்து அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10000 ரொக்கம், ரூ.3000 மதிப்பிலான வெள்ளி விநாயகர் சிலை ஆகிவற்றினை திருடியுள்ளனர். பின்னர் பீரோவை அங்கேயே வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுபற்றி மணிகண்டன் மணப்பாறை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மணிகண்டன் வீட்டின் அருகே வசிக்கும் சித்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவா வீடு உள்ளது. அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் நேற்று நள்ளிரவு திருட்டுபோனது. ஆகவே மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் சிவாவின் மோட்டார் சைக்கிளை திருடி தப்பிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. டி.என்.பி.எல். அதிகாரி வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு, கொள்ளை, கொலை சம்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதுக்காப்பு இல்லாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் உத்தரவின்படி அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றசம்பங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார்.