(Source: Poll of Polls)
ஜவ்வாது மலையில் பணிகள் முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் - சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை
ஜவ்வாது மலையில் நடைபெறும் பணிகளை அடுத்த மாதம் 30 ஆம் தேதிக்குள் முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் - ஒப்பந்ததாரர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை .
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் சுற்றுலாத் துறையின் சார்பில் நடைபெறும் சாகச சுற்றுலா கட்டிடம் மற்றும் தங்கும் விடுதி மற்றும் கோளப்பன் ஏரி ஆகிய பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது:
இந்த ஆய்வின்போது ரூ.2.9 கோடி மதிப்பில் தங்கும் விடுதி மற்றும் சாகச சுற்றுலா கட்டிடம் கட்டும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஒப்பந்ததாரர்களை அழைத்து பணிகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார். சுற்றுலாத் துறையின் சார்பில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த நிதியாண்டிலேயே கட்டி முடிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அடுத்த நிதியாண்டில் அவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் எச்சரித்தார்.
ஜவ்வாது மலையில் மாம்பழ தோட்டம் அமைக்க அரசு சார்பில் ஆய்வு
குறிப்பாக அந்தந்த துறை சார்ந்த திட்டங்களை அந்தந்த நிதியாண்டே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் இல்லை என்றால் அடுத்த நிதியாண்டில் அந்த துறைகளுக்கு நிதிகள் ஒதுக்கப்படமாட்டாது என தமிழக முதலமைச்சர் அமைச்சர்களுக்கு தெரிவித்துள்ளார் என்றும், ஜவ்வாது மலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஜவ்வாது மலையில் மாம்பழ தோட்டம் அமைக்க அரசு சார்பில் தேவைப்படும் நிலத்தினை ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் அரசிடம் நிலம் இல்லாமல் இருந்தாலும் தனியார் பங்களிப்பின் மூலம் அந்த இடத்தில் மாம்பழத் தோட்டம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செங்கம் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், மு. பே.கிரி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.