7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
ஆரணி அருகே 4 சிறுவர்கள் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையாளம் அண்ணா நகரில் வசிப்பவர் குப்பன். இவர் விவசாயக் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி அஞ்சலி மகன் மோகன்ராஜ் வயது (12), மகள் வர்ஷா வயது (9). அதே பகுதியில் வசிப்பவர் விநாயகம். இவர் கூலி தொழிலாளி, இவருடைய மனைவி செல்வி மகள்கள் கார்த்திகா வயது ( 8) , தனிஷ்கா வயது (5 ), இந்த நான்கு பேரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலை.யில் பள்ளிக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் சிறுவன் மோகன் ராஜ் உட்பட நான்கு பேரும் அங்குள்ள ஓடந்தாங்கல் ஏரியில் குளிப்பதற்காக ஒரே சைக்கிளில் சென்றுள்ளனர். சைக்கிள் மற்றும் உடைகளை ஏரிக்கரையில் விட்டு விட்டு நான்கு பேரும் தண்ணீரில் இறங்கி உற்சாகமாக குளித்துள்ளனர்.
4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி
மேலும் நீச்சல் அடித்தபடி தண்ணீரில் தொடர்ந்து சென்ற போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிக் கொண்டனர். இதனால் எவ்வளவு முயன்றும் வெளியே வர முடியாமல் போன நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே ஏறியில் குளிக்கச் சென்ற பிள்ளைகள் நான்கு பேரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்து நான்கு பேரையும் தேடி ஏரிக்கு விரைந்தனர். அப்போது ஏரிக்கரையில் சைக்கிள் மற்றும் உடைகள் மற்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து இளைஞர்கள் சிலர் ஏரியில் இறங்கி நான்காபுரமும் தேடினர் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சிறுவன் மோகன்ராஜ் மற்றும் சிறுமிகள் வர்ஷா, கார்த்திகா, தனிஷ்கா ஆகியோர் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பிரேத பரிசோதனைக்கு உடல்களை தர மறுத்த பெற்றோர் மற்றும் உறவினர்
பின்னர் சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்த பிறகு கொடுப்பார்கள். எனவே உடல்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டாம் என முடிவு செய்து நான்கு பேரின் உடல்களையும் அவர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். இது குறித்த தகவல் அறிந்து ஆரணி தாலுகா துணை ஆய்வாளர் மகாராணி உட்பட காவல்துறையினர் அங்கு சென்று நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்சில் ஏற்றினார். இதனால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து ஆம்புலன்சை முற்றுகையிட்டதோடு உடல்களை கொண்டு செல்ல மறுத்து வழி விடாமல் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஆம்புலன்ஸுக்கு வழிவிடப்பட்டது. இதுகுறித்து ஆரணி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என நான்கு பேர் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. குப்பன் அஞ்சலி இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் இருவரும் பல கோயில்களுக்குச் சென்று மனம் உருகி வேண்டிய பிறகே மோகன் வர்ஷா ஆகியோர் பிறந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இரண்டு பேரும் ஏரியில் மூழ்கி இறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.