Handloom Design Competition: சிறந்த வடிவமைப்புகளை தேர்ந்தெடுக்கும் போட்டி; முதல் பரிசு ரூ1 லட்சம் - கடைசி தேதி இதான்
போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் இரண்டாம் பரிசாக ரூபாய் 75 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும்.
மாநில அளவில் இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கு வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: இளம் தலைமுறையினரிடையே கைத்தறி இரகத்தின் மீது பிணைப்பை ஏற்படுத்தவும், அவ்வப்போது மாறிவரும் நவீன சந்தையின் தேவையினை அறிந்து புதிய வாடிக்கையாளர்களை கவர ஏதுவாகவும், கைத்தறி இரகங்களில் புதுமையினை புகுத்தி விற்பனையினை அதிகரித்திடும் நோக்கிலும் மாநில அளவில் இளம் கைத்தறி வடிமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை போட்டித்தேர்வின் மூலம் தேர்வு செய்ய ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் வடிவமைப்பு நிறுவனங்கள் ஜவுளிதொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு இடையே இப்போட்டி நடத்தப்படுகிறது.
போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் இரண்டாம் பரிசாக ரூபாய் 75 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும். மேலும் பங்கேற்பாளர்களின் தகுதி வடிவமைப்புகளில் உள்ள துணை வகைகள் விதிமுறைகள் மற்றும் வடிவமைப்பு நுழைவு நிபந்தனைகள் போன்றவைகள் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வழிகாட்டுதல்கள் வடிவமைப்பு நுழைவுப்படிவம் மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரியின் விவரங்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் உள்ளன இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள தகுதியான பங்கேற்பாளர்கள் 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் உதவி இயக்குநர் கைத்தறி துறை 1165 தென்றல் நகர் வேங்கிக்கால் திருவண்ணாமலை என்ற முகவரியில் வடிவமைப்பு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.