Pongal 2024: இளைஞர்கள் வருங்காலங்களில் தங்களது பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும் - அமைச்சர் எ.வ.வேலு
அனைத்து தரப்பு மக்களும் சமம் என்றும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை: இளைஞர்கள் வருங்காலங்களில் தங்களது பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் சே.கூடலூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழாவில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பொதுமக்களுடன் சமத்துவப் பொங்கல் கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது :-
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியார் சமுத்துவபுரத்தில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை
முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா இன்று சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்
எண்ணத்தில் உதித்த முத்தான திட்டம் தான் பெரியார் சமத்துவபுரம் திட்டமாகும். தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தான் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு மக்களும் சமம் என்றும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. நமது திருவண்ணாமலை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் தற்போது 6 பெரியார் சமத்துவபுரங்கள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சமத்துவ பொங்கல் விழா தண்டராம்பட்டு வட்டம் சே.கூடலூர் ஊராட்சியில் நடத்தப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சமத்துவ பொங்கல் விழாவை சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்த 100 குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் சமம் என்ற திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் சமூகத்தின் அடையாளமாக இருக்கின்ற நமது பாரம்பரிய நாட்டுப்புற நடனம் மற்றும் பாடல்களை ஊக்குவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
தற்போது மாநிலம் முழுவதும் நமது நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுகின்ற கலைஞர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகிறது. நாம் நமது பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்கள் வருங்காலங்களில் தங்களது பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் இன்னும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன். மேலும், இந்நிகழ்ச்சியின் வாயிலாக அனைவருக்கும் வரும் காலங்களில் உங்களது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று எனது சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகவும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி ,எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன் ,ஒ. ஜோதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷிப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.