கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை மலையேற தடை! புயல் எச்சரிக்கை காரணமாக பக்தர்களுக்கு அதிர்ச்சி!
Karthigai Deepam festival: "கார்த்திகை தீபத் திருவிழா அன்று, திருவண்ணாமலை மீது ஏற பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

"புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தன்று பொதுமக்கள் மலையெற தடை விதிக்கப்பட்டுள்ளது"
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
நினைத்தாலே முக்தி தரும் கோவிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, பொதுமக்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட மண்சறிவு காரணமாக, இந்த ஆண்டும் மலை மீது ஏற பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சொல்வது என்ன ?
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24.11.2025 முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 03.12.2025 அன்று அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு பெஞ்சால் புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டு மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
மிக கனமழை எச்சரிக்கை
தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிட்வா புயல் காரணமாக மிக கனமழை பொழிவதற்கான (ஆரஞ்ச் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுநர் குழு அறிக்கையில் மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை அற்றும், ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மைய பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும், தெரிவித்துள்ளது.
எனவே, புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலையேறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. மலை ஏற முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















