தேர்தல் அறிக்கையை விமர்சிக்க அதிமுகவுக்கு தகுதியில்லை - கனிமொழி காட்டம்
செய்யாறில் விவசாயிகள் சிப்காட்டு அமைப்பதற்கு போராட்டம் நடத்தி வருவதை நான் முதல்வரை சந்திக்கும்பொழுது விவரங்களை தெரிவிப்பேன்.
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் மூலம் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில் 2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி யுமான கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறனர். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கை குழு வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹாலில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் மனுக்களை பெற்றனர். திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி பேசுகையில்;
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்பதற்குத் தான் தலைவர் கலைஞர் காலம் தொற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு அந்த கருத்துக்களைப் பதிவு செய்து, அதைத் தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என உறுதியாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் போது, மக்களைச் சந்தித்து அவர்களுடைய விவரங்களை உள்வாங்கி உருவாக்கப்படுவதுதான் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை. அதன்படி, நாங்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய விவசாய மக்கள், தொழிலாளிகள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, தேர்தல் அறிக்கை உருவாக்கக் கூடிய பணியில் ஈடுபட்டு இருக்கின்றோம் என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தேர்தல் அறிக்கை குழு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது.பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளோம். மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும். முதலில் பிரதமர் மோடி 15 லட்சம் அனைவருக்கும் வங்கி கணக்கில் அனுப்புவதாக தெரிவித்தார். அதை பிரதமர் மோடி அனுப்பிய பிறகு அண்ணாமலை விமர்சிக்க உரிமை உண்டு. இந்தியாவில் எல்லா கட்சிகளும் 50% கூட தேர்தல் பத்திரம் வாங்வில்லை. பாஜக வில் தான் அதிக அளவில் பத்திரம் வாங்கியுள்ளார்கள். அவர்கள் யாரும் குற்றம் சொல்ல முடியாது. தன்னுடைய கட்சி பணத்தை கொண்டு வருவதற்காக பிஜேபி தவறான சட்ட வடிவம் கொண்டு வந்துள்ளது. அதை தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 10 வருடமாக ஆட்சி நடத்தி தமிழகத்தை பின்னோக்கி நகரக்கூடிய நிலையில் வைத்துவிட்டு சென்றனர். இன்றைக்கு திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
கல்வி, சுகாதாரம், தொழில் முனைவோர் வேலை வாய்ப்பு உருவாக்குதல் அனைத்தும் திமுக ஆட்சியில் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை விமர்சிக்கிற அளவுக்கு அதிமுகவுக்கு தகுதியில்லை. பாஜகவுக்கு யார் எதிராக பேசினாலும் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது இன்றைய மத்திய அரசாங்கத்தின் தொடர் நிலையாகும். விவசாயிகளின் போராட்டத்தை இந்த மத்திய அரசு குற்ற சம்பவங்களை போல நடத்தி வருகிறது . கண்ணீர் புகை குண்டு, கம்பிகளை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. விவசாயிகள் ஞாயத்துக்காக போராடி வருகிறார்கள் .ஆனால் பாஜக அரசு அதைக் கேட்க மனதில்லை அவர்களை எதிர்த்து ஊடகங்கள் குரல் எழுப்பினாலும் அவர்களை கூட நசுக்குகிறது. செய்யார் அருகில் சிப்காட் வேண்டாம் என பொதுமக்கள் போராடி வருகின்றனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு இது குறித்து நான் முதல்வரை சந்திக்கும்பொழுது விவரங்களை தெரிவிப்பேன். மேலும் விவசாயிகளை சந்தித்து விரைவில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.