‘கஞ்சாவால் ஆண்மை இழப்பு; அடிமையாகாதீர்கள்’ - இளைஞர்களுக்கு தூத்துக்குடி எஸ்பி அட்வைஸ்
எவன் ஒருவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் போது ஆசிரியருக்கும், வீட்டில் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறானோ, அவன் சமூகத்திற்கு தானாக கட்டுப்பட்டு தனது வாழ்க்கையில் முன்னேறுவான்- தூத்துக்குடி எஸ்.பி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்தியபாமா திருமண மஹாலில் வைத்து மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியும், ‘பள்ளிக்கு திரும்புவோம்” என்ற பெற்றோர்-மாணவர் விழிப்பணர்வு நிகழச்சியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய எஸ்.பி, “மகிழ்ச்சியான மற்றும் குற்றம் இல்லாத கிராமங்களை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும், கடந்த 24.04.2022 அன்று மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கப்பட்டு இதுவரை 2643 மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் போக்சோ சட்டம், போதைப்பொருள், செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது, தற்கொலை எண்ணங்கள் தவிர்ப்பது மற்றும் ஆன்லைன் மோசடி போன்ற 36 விழிப்புணர்வு அம்சங்கள் அடங்கியுள்ளது. அதேபோன்று பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய இளஞ்சிறார்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒருவன் கோபத்தினாலும், அவசரத்தினாலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் அவருடைய வாழ்க்கையும், அவரது மனைவி, பெற்றோர், குழந்தைகள் என மொத்த குடும்பத்தின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது. தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன் தான் உண்மையான வீரன். ஒருமுறை ஒருவர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர் அரசு வேலைக்கோ, தனியார் வேலைக்கோ அல்லது வெளிநாட்டில் வேலைக்கோ செல்வதற்கு பிரச்சனை ஏற்படுவதுடன் தங்கள் வாழ்க்கையும் தொலைக்க நேரிடும், அதை இளைஞர்கள் கண்டிப்பாக உணர வேண்டும், ஒருவன் கோபத்தினாலும், அவசரத்தினாலும் செய்யும் தவறுகள் மூலம் சிறை தண்டனை பெற்று வாழ்க்கையை இழப்பதை விட தன் குடும்பத்தினருக்காகவும் தனக்காகவும் பிறரிடம் அன்பாகவும் அமைதியாகவும் இருந்து வாழக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை நன்றாக அமையும்.
சில இளைஞர்கள் கஞ்சா போன்ற போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தொடர்ந்து அவற்றை உபயோகிப்பதால் இளம் வயதிலேயே ஆண்மையை இழந்து அவர்களது உடல் நலக்குறைவுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே இளைஞர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும். எவன் ஒருவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் போது ஆசிரியருக்கும், வீட்டில் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறானோ, அவன் சமூகத்திற்கு தானாக கட்டுப்பட்டு தனது வாழ்க்கையில் முன்னேறுவான். விளையாட்டுகளுக்கு எப்படி விதிமுறைகள், எல்லைகள் மற்றும் வெற்றி இலக்கு உள்ளதோ, அதே போன்று வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்” என்றார்.
தொடர்ந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலம் அருகேயுள்ள மைதானத்தில் வைத்து, போதைப் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான போதை விழிப்புணர்வு ஹாக்கி போட்டியினை துவக்கி வைத்த எஸ்.பி, தொடர்ந்து கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு கஞ்சா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், நமக்கும் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய செல்பி பாயின்டை திறந்து வைத்து செல்ஃபி எடுத்து கொண்டார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதை உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் அதுகுறித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் இது போன்று பொதுமக்கள் தகவல் தருவதற்காக 83000 14567 என்ற எண்ணையும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.