(Source: ECI/ABP News/ABP Majha)
Year Ender 2021: கச்சத்தீவு திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு...! அப்துல்கலாம் மூத்த சகோதரர் மறைவு...! அன்வர் ராஜா நீக்கம் - ராமநாதபுரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
கச்சத்தீவு திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு, அப்துல்கலாம் மூத்த சகோதரர் மறைவு, அன்வர் ராஜா நீக்கம் - ராமநாதபுரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ
ஜனவரி - கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
கச்சத்தீவு புனித அந்தோணியர் தேவாலய திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் ,பக்தர்களும் ஏமாற்றமடைந்தனர்.இந்திய துணை தூதரக அதிகாரிகளும், நெடுந்தீவு பங்குத்தந்தையும் , யாழ் மறை மாவட்ட ஆயர்கள் அடங்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜனவரி 19 - இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி 4 மீனவர்கள் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேசியா, நாகராஜன், செந்தில்குமார், ஷாம் ஆகிய 4 பேரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் அவர்களின் படகு மீது மோதியதில், படகு முற்றிலும் சேதமடைந்து நடுக்கடலில் படகு மூழ்கி 4 மீனவர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
பிப்ரவரி 21 - காவிரி-குண்டாறு திட்டத்துக்கு 14,000 கோடி ஒதுக்கீடு,விவசாயிகள் வரவேற்பு
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த 2020 செப்டம்பர் 21ஆம் தேதி ஆய்வுப் பணிக்காக வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து 2021 பிப்ரவரி 21 ஆம் தேதி இத்திட்டத்திற்கான தொடக்க விழா புதுக்கோட்டையில் நடந்தது. இத்திட்டத்திற்காக ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மார்ச் 7- அப்துல் கலாமின் மூத்த சகோதரர் மறைவு
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் வயது மூப்பு காரணமாக காலமானார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் (அண்ணன்) முகம்மது முத்து மீரான் மரைக்காயர்' வயது மூப்பு காரணமாக ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு தற்போது 104 வயது ஆகிறது.
ஏப்ரல் 17 - சரக்கு கப்பல் மோதி மீனவர்கள் உயிரிழப்பு
மங்களூரு அருகே சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்த மீனவர்களான பழனி, பாலமுருகன், வேத மாணிக்கம் ஆகிய மூன்று பேரும் கேரளாவுக்கு மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த இந்த மீனவர்கள், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 55 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஐ.பி.எல். லீ ஹாவேரே என்ற சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் இவர்களது விசைப்படகில் மோதியதில் படகு கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மே 29 - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறையில் புகார்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை பாலியல் புகார் அளித்தது கடந்த மே மாத இறுதியில் மாவட்ட அரசியல் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பெரும் புயலை கிளப்பியது. அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை தெரிவித்துள்ள பாலியல் புகார், பூதாகாரமடைந்தது. மலேசியாவைச் சேர்ந்த நடிகை சாந்தினி, சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தார்.
அ
ராமநாதபுரத்தில் கடந்த மே மாதத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் 'அள்ளி கண்மாய்' மின்மயானத்தில் உடல்களை எரியூட்ட காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. முன் எப்போதும் காணப்படாத இந்த நிலை அப்போது அதிக அளவிலான கொரானாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
ஜூலை 16 - மூன்று பேரை திருமணம் கில்லாடி பெண் கைது
ராமநாதபுரத்தில் அரசு வேலை வாங்கி தருவதாககூறி 63 பவுன் நகை - ரூ.10 லட்சம் மோசடி செய்த செளமியா என்ற பெண் கைது செய்யப்பட்டார். மேலும், அந்தப்பெண்ணுக்கு உடந்தையாக இருந்த வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். செளமியாவிடம் நடத்திய விசாரணையில், மேலும் இந்த ஏமாற்று பேர்வழி பெண், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட இதுவரை மூன்று பேரை திருமணம் செய்து அவர்களிடமும் பணம் நகையை திருடிய அதிர்ச்சி தகவலும் வெளியாகியது. இந்த கில்லாடி பெண்ணின் வழக்கு ராமநாதபுரத்தையும் தாண்டி பல மாவட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 20 - கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேர் கைது
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் திருடனை கூட்டு சேர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்தவர் 'செய்யது முஹம்மது பக்கீர். இவர் கீழக்கரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததற்காக அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் வேலை தேடி வேலூர் சென்று அங்கு ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு சில ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறுக்கு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அந்த வேலூர் கொள்ளை கும்பலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது..
டிசம்பர் 1 அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்
கட்சி விதிகளை மீறியதாகவும், கட்சியின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும் கூறி, இரவோடு இரவாக ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டு இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
டிசம்பர் 18 - 68 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
கடந்த 18 ஆம் தேதி இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மறுநாள் மண்டபம் மீனவர்கள் 12 பேர் என 55 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இதையடுத்து 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரும், 2 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். 68 மீனவர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 10 விசைப்படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
டிசம்பர் 19 - உத்ரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம்
ராமநாதபுரம் திரு உத்தர கோசமங்கையில் உள்ள மங்களநாதர், மங்களநாயகி கோயிலில் உள்ள மரகத நடராஜர் சிலை ஒலி, ஒளி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி கடந்த 10ஆம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. 19 ஆம் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையபட்டது.
டிசம்பர் 21 - மப்டியில் வந்த டெல்லி போலீஸ்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா தொடர்பாக விசாரணை நடத்த சாதாரண உடையில் வந்த டெல்லி காவல்துறையினருக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சாதாரண உடையில் சென்ற டெல்லி போலீசாரை உள்ளூர் காவல்துறையினர் யாரென்று தெரியாமல் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, தங்களின் அடையாள அட்டையை காண்பித்து போலி விசா தொடர்பான விசாரணைக்கு கீழக்கரை வந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
டிசம்பர் 28 - பாலியல் தொல்லை தந்த வழக்கறிஞருக்கு பார் கவுன்சில் தடை
நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமிக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புகாரில் வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சிலுக்கு பரிந்துரைக்க உத்தரவிட்டனர்.
டிசம்பர் 30 - முடிவுக்கு வந்த மீனவர்கள் போராட்டம்
68 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, வரும் ஒன்றாம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடன் நடந்த கூட்டத்தில் தற்காலிகமாக மீனவர்கள் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வரும் 3 ஆம் தேதியில் மீண்டும் மீன்பிடிக்க செல்வதாகவும் மீனவர்கள் அறிவிப்பு