கள்ளக்காதல் பிரச்னையில் வேன் ஓட்டுநர் வெட்டிக்கொலை- 3 பேர் கைது
குமாரின் மனைவி இராஜேஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் தேசிங்கு ராஜா இணைந்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டதில் லட்சுமணதுரை நிகழ்விடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணதுரை (40), ராஜபாளையத்தில் உள்ள கற்பகாம்பாள் நூற்பாலையில் ஊழியர்களை பணிக்கு அழைத்துவரும் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கருத்து வேறுபாடுகள் காரணமாக லட்சுமணதுரையின் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் தனியாக வசித்து வருகிறார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வானை (38) என்பவரும் லட்சுமணதுரை ஓட்டுநராக இருக்கும் கற்பகாம்பாள் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் தெய்வானையை பணிக்கு அழைத்துச் செல்லும் வேனில்தான் லட்சுமணதுரையும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் நாளடைவில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அறிந்த தெய்வானையின் சகோதரர் குமார் மற்றும் குடும்பத்தினர் அறிவுரை கூறியும் தெய்வானை கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தெய்வானை குலசேகரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறி லட்சுமணதுரையுடன் வாழ மலைப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த தெய்வானையின் சகோதரர் குமார் தனது சகோதரியை அழைத்துவர தனது மனைவி இராஜேஸ்வரி மற்றும் தனது நண்பரான கார் ஓட்டுநர் தேசிங்கு ராஜா ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு இன்று மாலை மலைப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது லட்சுமணதுரை மற்றும் தெய்வானை குருவிகுளம் கிராமத்திலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்றதாக கூறப்பட்டதால் காரில் குருவிகுளம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது அம்மன் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த லட்சுமணதுரையை அழைத்து தெய்வானையின் சகோதரர் குமார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியுள்ளது. கைகலப்பில் லட்சுமணதுரை கல்லை குமார் மீது எறிந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லட்சுமணதுரையை பலமாக தாக்கியுள்ளார்.
மேலும் உடன் வந்த குமாரின் மனைவி இராஜேஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் தேசிங்கு ராஜா இணைந்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டதில் லட்சுமணதுரை நிகழ்விடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவத்தை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த குருவிகுளம் காவல்துறையினர், லட்சுமணதுரையை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லட்சுமணதுரை பரிதாபமாக உயிரிழந்தார். தப்ப முயற்சித்த குமார், அவரது மனைவி இராஜேஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் தேசிங்குராஜா ஆகியோரை கைது செய்த குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் வேன் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.