(Source: ECI/ABP News/ABP Majha)
தசைநார் சிதைவு குறைபாட்டால் தங்கை மரணம் - தங்கையின் நினைவாக அண்ணன் செய்த செயல்..!
உலகத்தரம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை வசதியுடன் கூடிய கல்வி நிறுவனம் உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்
தசைநார் சிதைவு குறைபாட்டால் தங்கை மரணம் - தங்கையின் நினைவாக சொந்த ஊரில், மாற்றுத்திறனாளிக்களுக்கு இலவச சிகிச்சை வசதியுடன் சிறப்பு பள்ளி துவங்கிய மாற்றுத்திறனாளி அண்ணன் - தனது வீட்டையே பள்ளியாக மாற்றி அசத்தல்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தசைநார் சிதைவு குறைபட்டால் மரணமடைந்த தங்கையின் நினைவாக தனது சொந்த வீட்டை மாற்றுத்திறனாளிக்களுக்கு இலவச சிகிச்சை வசதியுடன் சிறப்பு பள்ளி தொடங்கி அசத்தியுள்ளார் மாற்றித்திறனாளிஅண்ணன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தனேஷ் கனகராஜ். தசைநார் சிதைவு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த இவரின் மாற்றுத்திறனாளி தங்கை கவிதா கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரின் நினைவாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணிய தனேஷ் கனகராஜ் போதிய தசைநார் சிதைவு சிகிச்சையும், விழிப்புணர்வும் இன்றி எவரும் உயிரிழக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தனது சொந்த கிராமத்தில் தனது வீட்டினை சிறப்பு பள்ளியாக மாற்றி அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிகிச்சை மையத்துடன் கூடிய சிறப்பு பள்ளி ஒன்றினை உருவாக்கியுள்ளார். இதன் திறப்பு விழா இக்கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் இந்த சிறப்பு பள்ளியை திறந்து வைத்தனர்.
விளாத்திகுளம் பகுதியில் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பள்ளியில் ஆட்டிசம், பெருமூளை வாதம், அறிவுசார் குறைபாடு, கற்றல் மற்றும் பல குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சையுடன் கூடிய கல்வி வழங்கப்படுகிறது. மேலும் இப்பள்ளியின் சார்பில் இலவச வாகன வசதியும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது தங்கையின் நினைவாக முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியை தொடங்கிய தனேஷ் கனகராஜூக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் உடைய பெற்றோரிடமிருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.
இந்த சிறப்பு பள்ளியை பற்றி மாற்றுத்திறனாளி தனேஷ் கனகராஜ் கூறுகையில், தனது தங்கையின் இறப்பிற்கு பின்னர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் இந்த பள்ளி தொடங்கியுள்ளதாகவும், இப்பகுதியில் 260க்கு மேல் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருப்பதாகவும் தெரியவந்தது. இங்கு அவர்களுக்கு பல்வேறு தெரபி, சிகிச்சைகள் மற்றும் அடிப்படைக்கல்வி போன்றவை அளிப்பதற்காக அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளதாகவும் ,குறிப்பாக, விளாத்திகுளம் பகுதியில் மிகப்பெரிய உலகத்தரம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை வசதியுடன் கூடிய கல்வி நிறுவனம் உருவாக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்