கனிமவள கடத்தல் தொடர்பாக அறிக்கையின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை - சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் எஸ். காந்திராஜன்
"யானைகள், சிறுத்தைகள் போன்ற வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்பாக தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்"
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, தினசரி சந்தைகள், ரயில்வே மேம்பால பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் எஸ். காந்திராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த பணிகள், குடிநீர் வழங்கள் மற்றும் வனம் இயற்கை வளங்கள் திட்டத்தின் செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் புதிய கோட்ட கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம் சங்கரன்கோவிலில் அமைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மற்றும் பாவூர்சத்திரத்தில் கால்நடை மருந்தகம் மருத்துவமனையாக உயர்த்த வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதிகளை சீரமைப்பு, உபகரணங்கள் வாங்குவது என பல்வேறு வசதிகள் செய்து தரக்கோரி உள்ளனர். இவை அனைத்தையும் குழு பரிந்துரை செய்யும். தென்காசி மற்றும் சுரண்டை நகராட்சி பகுதியை சுற்றி புறவழிசாலை அமைக்கவும் சிபாரிசு செய்கிறோம்.
தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். அதற்கான இடம் தருவதாக ஆட்சியர் ஒப்புதல் கொடுத்து உள்ளார். விரைவில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். அதற்காக குழு பரிந்துரை செய்யும். மொத்தமாக 974 கோடி மதிப்பிலான மேற்குறிப்பிட்ட பணிகளை செய்வதற்குரிய பணிகள் இன்று நடைபெற்றது.
இந்த தொகையை விரைந்து ஒதுக்கீடு செய்வதற்கு எந்த அளவிற்கு கமிட்டி உதவி செய்யுமோ செய்து அந்த பணத்தை பெற்று தரும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு துறையிலும் காலி பணியிடங்கள் மொத்தமாக 406 பணியிடங்கள் இந்த மாவட்டத்தில் காலியாக உள்ளது. இதனை விரைவாக நிரப்ப வேண்டும் என்று அறிக்கை சிலர் கொடுத்துள்ளனர். சிலர் கொடுக்கவில்லை, அதனையும் கொடுத்தால் சென்னையில் கமிட்டி கூடி முடிவெடுத்து பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்பு வந்துள்ளது. விரைந்து அடுத்த ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளையும் வைத்து கூட்டம் நடத்தி மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஒரு மாதத்திற்குள் அறிக்கை தயார் செய்து கொடுப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். அது வந்தவுடன் சென்னையில் உள்ள துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான வழிகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றார்.
சிறுத்தைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து உள்ளது என்றால் அதன் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய சிக்கலான விசயம். இதில் அரசுக்கு மிகப்பெரிய முயற்சி எடுத்தால்தான் முடியும், முதல்வரின் கவனத்திற்கு நிச்சயமாக கொண்டு செல்லப்படும். யானைகள், சிறுத்தைகள் போன்ற வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்பாக தனிகவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.