நெல்லை: பேருந்து வசதியின்றி அச்சத்துடன் நடந்து செல்லும் மாணவ மாணவியர்.! இம்முறையாவது தீர்வு கிடைக்குமா?
சிலர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. செல்லும் வழியில் மதுபானக்கூடம் இருப்பதால் அச்சத்தோடு தான் அதனை கடந்து செல்லும் சூழல் உள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பனயங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இடைகால், பாரதிநகர், குமாரசாமிபுரம், செங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் நெல்லை மற்றும் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்காக சென்று வருகின்றனர். ஆனால் இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி அப்பகுதியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 4 கிலோ மீட்டர் வரை தங்களது புத்தகங்களை சுமந்து சென்று பேருந்துகளை பிடிக்கும் அவல நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மாணவ, மாணவியர்.
மேலும் பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்ப பல மணி நேரம் வரை ஆகிறது. இதன் காரணமாக தங்களது படிப்புக்கான எந்த ஆயத்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியும், தங்கள் பகுதியில் இருந்து தேவையான பேருந்துகளை பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் இயக்க வலியுறுத்தியும் அக்கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவியர் ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி சீருடையுடன் மனு அளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆட்சியரிடம் இது தொடர்பாக மூன்று முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே மீண்டும் தங்களது கோரிக்கைகளை இம்முறையாவது நிறைவேற்றி தருவதோடு தங்களது படிப்பு தடைபடாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி மாணவிகள் தெரிவிக்கையில், மிதிவண்டி உள்ள ஒரு சிலர் அதில் சென்று ஓர் இடத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து பேருந்து ஏறி செல்கிறோம். சிலர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. செல்லும் வழியில் மதுபானக்கூடம் இருப்பதால் அச்சத்தோடு தான் அதனை கடந்து செல்லும் சூழல் உள்ளது. அதே போல மாலை 5 மணி பேருந்தை விட்டு விட்டால் மீண்டும் பேருந்திற்காக காத்திருந்து வீடு வந்து சேர்வதற்குள் இரவாகி விடுகிறது. இதனால் வீட்டிற்கு வந்து படிக்க முடியாத சூழல் உள்ளது. அப்படியே பேருந்துக்காக காத்திருந்தாலும் அப்பகுதியில் வரும் பேருந்துகள் முழுதும் நிரம்பி வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான நிலையில் பேருந்தில் ஏறி பயணம் செய்யும் சூழல் உள்ளது. எனவே எங்கள் ஊருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
குமாரசாமியாபுரம் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவி அளித்த பேட்டியில், தங்கள் ஊரில் இருந்து பேருந்து ஏறும் பகுதிக்கு தங்களது புத்தக பைகளை சுமக்க முடியாமல் சுமந்து செல்லும் நிலை உள்ளது. அங்கிருந்து பேருந்து ஏறினால் கூட்டத்துடன் படிக்கட்டில் பயணம் செய்யும் போது கீழே விழும் நிலை உள்ளது. அதே போல அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசம் பகுதி வழியாக செல்லும் பேருந்துகளை தங்களது பகுதி வழியாக இயக்கினால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து கழகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது சிரமத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்..