
3 ஆண்டுகளில் இவ்வளவு குழந்தை பிரசவங்களா? - நெல்லையில் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரவங்கள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு அன்றைய நாளில் உடல் ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள (War Room) எனப்படும் பேரிடர் கால சிறப்பு கண்காணிப்பு அறை மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து பாதிப்புகள் அதிகமாக உள்ள இடத்தில் கூடுதல் மருத்துவர்களை அனுப்பி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கொரோனாவை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களை இதே பேரிடர் கால கண்காணிப்பு அறை ( war room ) மூலம் கண்காணித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களையும், வலைதளம் மூலம் ஒன்றிணைத்து அவர்களுக்கு பிரசவம் சிறப்பாக நடைபெற முழுமையான உதவிகள் செய்ததால் அந்த ஆண்டுக்கான தமிழக அளவிலான தாய் சேய் நலத்திட்ட விருதையும் பெற்றார்.
இந்த நிலையில், நெல்லையில் பிரசவம் தொடர்பாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் அதிகமான எண்ணிக்கையில் குழந்தை பிரசவங்கள் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த சுகாதார ஆர்வலர் வெரோனிகா மேரி தகவல்களை கேட்டுள்ளார். அதில் மாவட்ட நிர்வாக எல்லைக்குள் செயல்படும் மொத்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை நிலையங்கள் ஆகிய ஊரின் பெயர்களை தனித்தனியாகவும் அங்கு கடந்த 01.01.21 முதல் 31.12.21 முதல் 18 வயத்திற்குட்பட்ட பெண் குழந்தைகள் பிரசவம் பார்க்கப்பட்ட மொத்த எண்ணிக்கை விவரங்கள் ஆகியவற்றையும், அதே போல 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு 18 வயதிற்கு கீழ் பார்க்கப்பட்ட பிரசவங்கள் என அனைத்தையும் தனித்தனியாக கேட்டுள்ளார்.
நெல்லை துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அளித்த தகவலின் படி “1,448 பிரசவங்களில், 1,101 பிரசவங்கள் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்துள்ளது. மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 347 குழந்தை பிரசவங்கள் நடந்துள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் உள்ள 52 ஆரம்ப சுகாதார மையங்களில் மேலப்பாளையம் நகர்ப்புற சுகாதார மையத்தில் அதிக எண்ணிக்கையிலான பிரசவங்கள் (88 பேருக்கு) நடந்தது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து மானூர் கிராமப்புற சுகாதார நிலையத்தில் (44) பிரசவங்கள் நடைபெற்று உள்ளதும், வன்னிக்கோனேந்தல் மற்றும் பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 43 சிறுமிகளுக்கும் பிரசவங்கள் நடந்து குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது. இதே போன்று ஒவ்வொரு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நடைபெற்ற குழந்தை பிரசவங்களின் எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரவங்கள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதிற்கு குறைவான குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வுத் திட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும், பள்ளிப் பாடப் புத்தகங்களில் பாலியல் கல்வி மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உடல் ரீதியான மருத்துவ குறைபாடுகளை உள்ளடக்கவும் மாநில அரசுக்கு வெரோனிகா மேரி கோரிக்கை விடுத்துள்ளார். எனவே தமிழக அரசு இதன் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக துவங்க வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற சம்பவங்கள் குறைக்க இன்னும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை குறைக்க வேண்டும் என்பதையே இத்தகவல்கள் உணர்த்துகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

