Nellai Rain: நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை..! மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு..!
கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதன் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வெயில் அடித்து வந்த நிலையில் மதியம் கருமேகம் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகளுடன் காணப்பட்டது. பின்னர் மாலை வேளையில் இடி மின்னலுடன் நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுண், பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக சாலைகளின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
குறிப்பாக மழையுடன் சேர்த்து பலத்த காற்றும் வீசியதால் டவுண் நயினார் குளம் அருகில் உள்ள நயினார் குளம் சாலை ஓரம் நின்ற மரம் ஒன்று முறிந்து அதன் கிளைகள் சாலையின் நடுவே விழுந்தது. குறிப்பாக செங்கோட்டை - தென்காசி போன்ற பகுதிகளிலிருந்து நெல்லை நோக்கி வரும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் நகரின் முக்கிய சாலை என்பதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனம் மூலம் மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். உடனடியாக மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மரக்கிளை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.