கைத்தறி, கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் நெல்லையில் கண்காட்சி துவக்கம்..!
16 மாநிலங்களைச் சேர்ந்த கைவினைப்பொருட்கள் 27 அரங்குகளில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் காண வேண்டும் என அழைப்பு விடுப்பு.
இந்திய கைத்தறி பட்டு தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழும் ஆர்எம்கேவி நிறுவனம் 1924- ம் ஆண்டு நெல்லையில் விஸ்வநாதபிள்ளை என்பவரால் தொடங்கப்பட்டு இன்று மாநிலத்தில் பல்வேறு கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு நூற்றாண்டை கொண்டாடி வருகிறது. நூற்றாண்டு விழா மற்றும் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி, கைவினை பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு கைத்தறி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஆர்எம்கேவி சில்க்ஸ் நிறுவனத்தில் கர்நாடகா, அஸ்ஸாம், காஷ்மீர், மேற்குவங்கம், ராஜஸ்தான், குஜராத், ஓடிசா உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் அந்த அந்த மாநிலங்களின் முக்கியமான கைவினை பொருட்கள் செயல்முறை விளக்கத்துடன் 27 அரங்குளில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி இன்று (நேற்று) 7- ந்தேதி முதல் 11- ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அரங்கினைப் பார்வையிட்டார். மேலும் கண்காட்சியில் பாரம்பரிய முறையில் பட்டுநெசவு செய்வது, இயற்கை முறையில் சாயம் தயாரித்து துணிகளில் சாயம் பூசுவது ஆகியவை செய்து காட்டப்பட்டது பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது. இதுகுறித்து ஆர்எம்கேவி சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கவாசகம், பிரனவ்குமாரசுவாமி, சங்கர்குமார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மறைந்த நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன் அவர்களால் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வேர்களைத்தேடி என்ற நிகழ்வு 2000 வது ஆண்டில் தொடங்கினார். அந்த நிகழ்வின் மூலம் எங்கள் கடையில் வாங்கப்பட்ட துணிகள், பில் என பல பொருட்களை வாடிக்கையாளர்கள் எங்களிடம் கொண்டு வந்து தந்தனர். அப்படிப்பட்ட ஆவணங்களின் மூலமே எங்கள் நிறுவனம் 1924- ம் ஆண்டு நிறுவனம் தொடங்கப்பட்டதை அறிந்து கொண்டோம். அதன் அடிப்படையில் இன்று 2024- ம் ஆண்டு நூற்றாண்டை கொண்டாடி வருகிறோம்.
எங்களின் இந்த வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்கள்தான் மிக முக்கிய காரணம். நூற்றாண்டை கொண்டாடும் வகையிலும் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டும் கைத்தறி மற்றும் கைவினை பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில் கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இங்கு 16 மாநிலங்களைச் சேர்ந்த கைவினைப்பொருட்கள் 27 அரங்குகளில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் காண வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். மேலும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் எங்கள் தொழிலாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினர். தேஇந்த நிகழ்ச்சியில் நிறுவன உரிமையாளர்கள் சிவகுமார், வெங்கடேஷ், மகேஷ், மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீராம், பூஜேஸ்ரீமித்தமா, அனுராதா, பொன்ஆனந்த், பிரபாமகேஷ், ஜெயமீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.