மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?
மாநகர போக்குவரத்து பேருந்துகளில் எந்தெந்த பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படாது? என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகளுக்கும் குறிப்பிட்ட எடை அளவிற்கு மேல் இருந்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
லக்கேஜ் கட்டண புதிய விதிகள்:
இந்த நிலையில், லக்கேஜ் கட்டணத்தில் புதிய விதிகளை மாநகர போக்குவரத்து கழகம் அமல்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அவர்கள் விடுத்துள்ள உத்தரவில், “ மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான சுமைக்கட்டணம் குறித்து நடத்துநர் மற்றும் பயணிகள் இடையே சுமூகமான உறவை உறுதி செய்யும் வகையில் பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள், புகார்களின் அடிப்படையில் மாநகர போக்குவரத்து கழக இயக்கும் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் பணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு ( லக்கேஜ்) சுமைக்கட்டணம் வசூலிக்கும் போது கீழ்க்கண்ட விதிககளை பயணிகளிடம் நடத்துனர்கள் பின்பற்றி சுமைக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அறிவுறுத்தப்படுகிறது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கும் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு (Luggage), சுமைக்கட்டணம் வசூலிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.#MTCChennai | #MTC4Chennai |… pic.twitter.com/5T1h48dCRm
— MTC Chennai (@MtcChennai) November 18, 2024
- பயணிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தோள்களில் மாட்டிச் செல்லக்கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள்/பைகள், கேமரா போன்ற கையடக்கமான சாதனஙங்கள், லேப்டாப், சிறிய அளவிலான கையில் எடுத்துச் செல்லத்தக்க மின் சாதன பொருட்கள் போன்றவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கைலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்திய கருவிகள் முதலியவைகளும் இலவசமாக ஏற்றிச் செல்லக்கூடிய சுமைகள் ஆகும்.
- பயணிகள் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல டிராலி வகையிலான சூட்கேஸ்கர் அதிகபட்சமாக 65 செ.மீட்டர் அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவைகள் கட்டணமின்றி பயணிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்.
- ஒரு பயணி சொந்த உபயோகத்திற்காக 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்.
- பயணிகள் எடுத்து வரும் 65 செ.மீட்டர் அளவிற்கு மேல் உள்ள டிராலி வகையிலான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு 1 பயணிகளுக்கு பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
- 20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைகளுககு 1 பயணிகளுக்கான பயணக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
- அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது.
- பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக்கூடாது.
- சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக்கூடாது.
- பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக்கூடாது.
- செய்தித் தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல முன் அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.