நெல்லையில் மாணவர்களிடையே மீண்டுமொரு சாதிய மோதல்..! என்று தணியும் சா”தீ”ய மோதல்...! அச்சத்தில் பெற்றோர்கள்
இரண்டு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள சாதிய மோதலால் பெற்றோர்களுடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் நாகர்கோவில் செல்லும் சாலையில் பொன்னாக்குடி அடுத்துள்ளது மருதகுளம் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் பொன்னாக்குடி, மருதகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் 12 ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பு மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மூன்றடைப்பு காவல் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளரும் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளார். இதில் மாணவர்கள் ஜாதி ரீதியாக இரு தரப்பினராக பிரிந்து மோதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் கூறும் பொழுது, அங்கு இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதற்கு முன்னரும் ஜாதி ரீதியிலான பிரச்சினை பள்ளியில் நடந்துள்ளது. 10 வகுப்பு மாணவர்கள் இருவருக்குள் சண்டை நடந்துள்ளது. ஒரு மாணவன் போன் செய்து மிரட்டிய நிலையில் 10, 15 மாணவர்கள் சேர்ந்து அந்த ஊர்க்காரன் தானே நீ என்று இரண்டு பேரையும் அடித்தனர். ஜாதி ரீதியிலான பிரச்சினை இதே போல தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்தனர். மாணவர்கள் மீதான தாக்குதல் சிறிய அளவில் இருந்தாலும் அதன் பின்னணி ஜாதி ரீதியிலானது என்பது தான் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதே போல இந்த ஊருக்கு அருகில் இருக்கக்கூடிய நாங்குநேரி பள்ளி ஒன்றில் ஜாதி ரீதியாக நடந்த மோதலில் மாணவன் சின்னத்துரையின் வீடு புகுந்து அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் இது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மீண்டும் அதே போன்று ஒரு சம்பவமாக இரண்டு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெற்றோர்களுடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.