நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா? மாநகராட்சி ஆணையர் பரபரப்பு தகவல்? பின்னணி இது தான்..
” 1ம் தேதி நாளிட்ட ராஜினாமா கடிதம் மேயர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதத்தை கவுன்சில் தான் ஏற்கவேண்டும்” - ஆணையர் தகவல்
நெல்லை மேயர் ராஜினாமா?
நெல்லை மாநகராட்சியில் மேயருக்கும் கவுன்சிலர்களுக்குமிடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த மோதல் போக்கு மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் அனைவருமே மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தனர். இந்த மோதல் போக்கானது மேயர் பொறுப்பேற்ற ஒரு சில வாரத்தில் இருந்து கடந்த வாரம் வரை நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டம் வரை எதிரொலித்தது. குறிப்பாக மேயர் மாமன்ற உறுப்பினர்கள் மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையிலே திருநெல்வேலி மாநகராட்சி உள்ளது. இதனால் மக்கள் நலத் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைமையும் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் தற்போது நெல்லை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக தலைமை அறிவுறுத்தலின் பேரில் இந்த ராஜினாமா செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ராஜினாமா கடிதத்தை மேயர் சரவணன் நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவிடம் அளித்துள்ளார். ஆனால் மாநகராட்சி தரப்பிலோ, திமுக தலைமையிலிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சற்று நேரத்தில் அந்த அறிவிப்பானது வெளியிடப்படும் என தெரிகிறது.
பலனளிக்காத கட்சி மேலிட பேச்சுவார்த்தை:
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 44 இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில் அந்த வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்களே உள்ளனர். மேலும் கூட்டணிக் கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் 7 பேரும் உள்ள நிலையில் அதிமுக சார்பில் 4 பேர் மட்டுமே மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாநகரத்தின் மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும் செயல்பட்டு வருகின்றனர். மேயர் சரவணன் பொறுப்பேற்ற சில நாட்களிலிருந்தே மாமன்ற உறுப்பினர்களுக்கும் மேயருக்குமிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் கட்சி மேலிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியது, கட்சியிலிருந்து கவுன்சிலர்களை நீக்கியது என பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் ஒவ்வொரு மாமன்ற கூட்டங்களிலும் இந்த மோதல் போக்கானது நீடித்தது.
இதனிடையே மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லை என 38 மாவட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிற்கு கடிதம் அனுப்பினர். அதன் பின்னரும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு நெல்லையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என அறிவுறுத்தி சென்ற நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் வெளியூர்களுக்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் சுற்றுலா சென்றனர். இதனால் நம்பில்லையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அதன்பின்னரும் நடைபெற்ற ஒவ்வொரு மாமன்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் கவுன்சிலர்கள் புறக்கணித்து வந்தனர். இதனால் ஒரு கூட்டம் கூட நடைபெறாத நிலையிலேயே நெல்லை மாநகராட்சி நிர்வாகம் இருந்து வந்தது.
பனிப்போரின் பிண்ணனி:
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாபின் தீவிர ஆதரவாளராக சரவணன் இருந்து வந்தார். அதன்பின் மேயராக பொறுப்பேற்ற ஒரு சில வாரங்களில் அப்துல்வகாப்பிற்கு எதிராக செயல்பட்டதாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த போது கட்சி அறிவுறுத்தலின் பேரில் மேயர் சரவணன் வெற்றி பெற வேண்டும் என மாமன்ற உறுப்பினர்களை தனது பாதுகாப்பில் அப்துல்வகாப் வைத்திருந்தார். இருந்த போதிலும் மேயருக்கும், அப்துல்வகாப் எம்எல்ஏவுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. எப்படியும் மேயரை மாற்ற வேண்டும் என்று அப்துல்வகாப் காய்களை நகர்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியே இறுதியாக கடந்த 28 ஆம் தேதி நடந்த கூட்டதிலும் மாநகராட்சி அனைத்து வார்டு பொதுமக்களின் நலன் கருதியும், மேயரின் ஏதேச்சையான அராஜக போக்கினை கண்டித்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலையில் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம் என திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து பரபரப்பு நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டு புறக்கணித்தனர். இதனால் கடந்த கூட்டத்திலும் கோரம் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எனவே ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையே நிலவும் மோதல் போக்கால் மக்கள் நல பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையிலேயே கட்சி மேலிட அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆணையர் தகவல்:
ஜூலை 8 ம் தேதி நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறும். 1ம் தேதி நாளிட்ட ராஜினாமா கடிதம் மேயர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதத்தை கவுன்சில் தான் ஏற்கவேண்டும். கவுன்சில் கூட்டம் துணை மேயர் நடத்துவார். திங்கட்கிழமை முதல் மேயர் ராஜினாமா ஏற்கபடும் என ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.