அவதூறு பரப்பிய அறப்போர் இயக்கம் மீது சட்ட நடவடிக்கை - நெல்லை மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம்
தப்பு நடந்ததற்கு தண்டனையை நாங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டோம். மீண்டும் எங்களை தண்டிக்க பார்க்கிறார்கள். அவதூறு பரப்ப வேண்டும் என்று திட்டமிட்டு இணையதளத்தில் தகவலை வெளியிட்டுள்ளனர் அறப்போர் இயக்கத்தினர்.
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த குவாரி விதிமீறி இயங்கியதாலயே விபத்து நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை மாவட்ட கல்குவாரிகளில் சுமார் 700 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக சென்னையை சேர்ந்த அறப்போர் இயக்கம் சமீபத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டது. அதில் நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர், கிராகெம்பெல் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் விதிமீறிய கல் குவாரிகளுக்கு துணை ஆட்சியர் விதித்த 262 கோடி ரூபாய் அபராத தொகையை ஐஏஎஸ் அதிகாரிச் ஜெயகாந்தன் சுமார் 15 கோடியாக குறைத்ததாகவும் தெரிவித்தனர். எனவே நெல்லை கல்குவாரி சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் நெல்லை மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது சங்கத் தலைவர் ரிச்சர்ட் கூறும்போது, "நெல்லை மாவட்ட கல்குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபாரத தொகையை 262 கோடியிலிருந்து 14 கோடியாக ஜெயகாந்தன் ஐஏஎஸ் குறைத்ததாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளனர். பட்டா உள்ள குவாரிகளில் விதிமீறல் நடக்கம் பட்சத்தில் அள்ளப்பட்ட கனிம வளங்களுக்கான மொத்த விலையை அபராதமாக செலுத்த வேண்டும் என்று சட்டத்தில் இடமில்லை. ஜெயகாந்தன் மீது தவறான குற்றச்சாட்டை கூறிகின்றனர். அவர் ஏற்கனவே இதே நெல்லை மாவட்டத்தில் கோட்டாட்சியராக இருந்தபோது சட்டத்துக்கு புறம்பாக கனிம வளங்களை கொண்டு சென்ற 360 லாரிகளை பறிமுதல் செய்து அரசுக்கு வருமானத்தை பெற்று தந்தார். அதேபோல் 8000 கோடி அளவுள்ள அரசு நிலங்களை மீட்டுக் கொடுத்துள்ளார். அவரை இணையதளத்தில் அவதூறு பேசுகிறார்கள். அபாரதத்தை தவணை முறையில் செலுத்த முடியுமா என கேட்டுள்ளனர். மாநில அரசின் சட்டத்தில் அதற்கு வழி இருக்கிறது. தொடர்ந்து இணையதளத்தில் எங்களை திருடர்களை போன்று பேசுகிறார்கள். ஒவ்வொரு குவாரிகளுக்கும் தனித்தனியாக அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அறப்போர் இயக்கம் கூறியபடி 700 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. விதீமறி அள்ளப்பட்ட கனிம வளங்களுக்கு உண்டான விலையில் 15 மடங்கு தொகையை அபராதமாக கட்டும்படி கூறினர். அது எப்படி எங்களால் கட்ட முடியும். எனவேதான் சட்டப்படி ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் அபராத தொகையை குறைத்தார். அவதூறு பரப்ப வேண்டும் என்று திட்டமிட்டு இணையதளத்தில் தகவலை வெளியிட்டுள்ளனர்.
எங்கள் தாத்தா பார்த்த விவசாயத்தை அப்பா பார்த்தார்கள். அப்பா பார்த்த விவசாயத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. குவாரித்தொழிலில் லாபம் இருப்பதால் எங்கள் இடத்தில் தோண்டி கனிம வளங்களை அள்ளுகிறோம். இதில் என்ன தவறு? நாங்களும் மனிதர்கள் தானே? எங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றது. மிக தரக்குறைவாக பேசுகிறார்கள். எல்லாத் துறைகளிலும் அரசியல் கட்சியினர் பின்னணியில் இருக்கின்றனர். எம்பியாக இருப்பவர்கள் குவாரி நடத்தக்கூடாது என்று எதுவும் சட்டம் இல்லை. தப்பு நடந்ததற்கு தண்டனையை நாங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டோம். மீண்டும் எங்களை தண்டிக்க பார்க்கிறார்கள். அதிகபட்சம் 55 மீட்டர் ஆழத்திற்கு கனிம வளங்கள் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படும். 55 மீட்டரில் 10 லட்சம் கியூபிக் மீட்டர் வரை கனிம வளங்களை அள்ளிக் கொள்ளலாம். அதற்கு மேல் அள்ளுவதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும். எனவே இதை திருட்டு என்று சொல்ல முடியாது. அவதூறு பரப்பிய அறப்போர் இயக்கம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நிர்வாகிளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்" எனத் தெரிவித்தார்.