ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
மொத்தம் ரூபாய் 80,000/-ஒரு மாத காலத்திற்குள் தனியார் காப்பீடு நிறுவனம் மனுதாரருக்கு வழங்க வேண்டும். வழங்க தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவு
நெல்லை கே டி சி நகர் வெல்கம் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 09.04.21 அன்று தனது ஆடி காரில் நெல்லையிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்து உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி ஒன்று காரின் இடதுபுறம் பின்பக்கம் மோதியுள்ளது. பயணம் செய்யும் வழியில் ஏற்பட்ட விபத்தால் வாகனம் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து வாகன காப்பீடு செய்த தனியார் காப்பீடு நிறுவனத்திடம் காப்பீடு தொகை கேட்டு செந்தில்குமார் விண்ணப்பித்துள்ளார். அதன்படி காப்பீடு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பேரில் மதுரையில் உள்ள தனியார் ஆடி கார் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்ய வாகனத்தை நிறுத்தி உள்ளார்.
அதன் பின்னர் வாகனத்தை ஆய்வு செய்த தனியார் சர்வீஸ் நிறுவனம் வாகனத்தில் பழுது நீக்கம் செய்ய உத்தேச மதிப்பீடு கொடுத்துள்ளது. தனியார் காப்பீடு நிறுவனமானது சர்வீஸ் செய்வதற்கு அனுமதி வழங்கியதால் சர்வீஸ் நிறுவனமானது வானகத்தின் பழுது நீக்கி சர்வீஸ் செய்து கொடுத்துள்ளது. வாகன விபத்தின் போது ஏற்பட்ட வலது பக்க ஆலாய் வீல் சேதத்தை சர்வீஸ் நிறுவனமானது உத்தேச மதிப்பீட்டில் குறிப்பிட தவறியதால் மேலும் ரூபாய் 75000/- செலுத்துமாறு தெரிவித்துள்ளது. உடனே செந்தில்குமார் காப்பீடு நிறுவனத்திற்கு மேலும் ரூபாய் 75000 - வழங்க வேண்டும் என கேட்டு இமெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் காப்பீடு நிறுவனம் அதனை வழங்க மறுத்து ரூபாய் 30,000/- மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. பின்னர் சர்வீஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 45,000 /- செந்தில் குமார் தனது சொந்த பணத்தை கொடுத்து ஆடி காரில் உள்ள பழுதை நீக்கி பெற்றுள்ளார்.
அதோடு காப்பீடு நிறுவனம் அந்த தொகையை வழங்க மறுத்ததால் வாகனத்தில் பழுதுநீக்கம் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் செந்தில்குமார் சொந்த தேவைக்கு வாடகை வாகனத்தை பயன்படுத்தியதால் ரூபாய் 1,00,00/- இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்ட செந்தில்குமார் வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி மாவட்ட குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 20,000, சர்வீஸ் நிறுவனத்திற்கு செந்தில்குமார் செலுத்திய தொகை ரூபாய் 45,000 அதற்கு 6.5% வட்டியும், வாகனத்தினை பழுது நீக்கம் செய்ய ஏற்பட்ட காலதாமதத்தால் வேறு வாகனம் பயன் படுத்தியதால் ஏற்பட்ட இழப்பீடுக்கு ரூபாய் 10,000 வழக்குச் செலவு ரூபாய் 5000 சேர்த்து மொத்தம் ரூபாய் 80,000 ஒரு மாத காலத்திற்குள் தனியார் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். வழங்க தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். காப்பீடு நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு பல நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதோடு இந்த உத்தரவு பேசுபொருளாகவும் மாறியுள்ளது.