திருநெல்வேலி அல்வா தெரியும்; நன்னாரி பால் தெரியுமா ? - 100-ஆண்டுகளை நெருங்கும் கடையின் கதை..
”வீட்டு சமையல் பக்குவத்திலும், மக்களின் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் கொடுத்து தனக்கென தனி அடையாளத்தை வகுத்து இன்றளவும் எளிமையோடு 100 ஆண்டுகளை கடக்க உள்ளது இந்த டிபன் கடை”
நெல்லை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது தாமிரபரணியும், அந்த நீரில் உருவாகும் அல்வாவும் தான், நெல்லை மக்களுக்கென அடையாளத்தை உருவாக்கிய இவை இரண்டுமே காலங்காலமாக தனி பெருமையை வகுத்து உள்ளது. அந்த அல்வாவை புதுவித ரகமாக மக்களுக்கு வழங்குவதிலும் ஒரு சில கடைகள் தங்களுக்கென தனி அடையாளத்தை வகுத்து இன்றளவிலும் மக்கள் மத்தியில் பெயர் பெற்று விளங்குகிறது. அவ்வாறு பலர் தங்களுக்கென தனி அடையாளங்களை தேடி அந்த வழியில் தங்களது வாழ்வாதாரங்களை வளர்த்து வருகின்றனர்.
அப்படி தனக்கென தனி அடையாளத்தை வகுத்துள்ளது நெல்லை டவுண் ஆர்ச் அருகே உள்ள விஞ்சை விலாஸ் டிபன் சென்டர், இன்னும் 3 வருடங்களில் சதமடிக்க இருக்கும் இந்த கடையின் தனிச் சிறப்பு என்பது நன்னாரி வேரில் தயார் செய்யப்படும் நன்னாரி பால்.
பொதுவாக நன்னாரியில் சர்பத் மட்டுமே நாம் சாப்பிட்டு பழகியிருப்போம், பாலில் நன்னாரி கலந்து சாப்பிடுவது என்பது பலரும் சிந்தித்து பார்க்காத ஒன்று, அதுவும் பாலில் நன்னாரியை கலந்தால் பால் திரிந்து விடும் என்பதே அனைவருக்கும் தெரிந்த ஒன்று, ஆனால் இந்த கடையின் அடையாளமே நன்னாரி பால் தான், நெல்லையில் வேறு எந்த கடைகள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் எங்குமே நன்னாரி பால் என்பது யாரும் சாப்பிட்டு இருக்க முடியாத ஒன்று என்று கூறும் கடை உரிமையாளர்,
இது தனது தாத்தா காலத்தில் இருந்தே பொதுமக்களுக்கு வழங்கி வரும் சத்தான ஒரு உணவு பொருள் என்று கூறுகிறார். புதுமையான விஷயத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தாத்தா ஆரம்பித்த ஒன்று, தற்போது வரை அதனை பின் தொடர்ந்து வழங்கி வருகின்றோம். நன்னாரி தயாரிப்பு என்பது கேரளாவில் இருந்து வாங்கப்படும் நன்னாரி வேரை பொடி செய்து, 3 நாள் வரை அழுகும் படி ஊர வைத்து அவித்து அதில் வரும் ஆவியை பாட்டிலில் அடைத்து சர்க்கரை பாகு கலந்து கெமிக்கல் இல்லாமல் இயற்கை முறையில் தயாரித்து பால் கலந்து பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறோம். இது உடலுக்கு குளிர்ச்சியை தரும் ஒரு மருத்துவ குணம் கொண்ட மணமுடன் கூடிய தனிச் சுவையுடன் கிடைப்பதால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். நன்னாரி பால் மட்டுமின்றி வீட்டு முறையில் தயாரிக்கப்படும் இட்லி பொடியை கொண்டு விதவிதமாக தயாரிக்கபடும் தக்காளி தோசை, இட்லி பொடி தோசை போன்ற ஊத்தப்பங்களும், இட்லியும் இங்கு ஸ்பெஷல் என்று கூறுகிறார்,
இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறும் பொழுது, தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இந்த கடையில் தான் சாப்பிட்டு வருகிறேன். நெல்லை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் சாப்பிட கால் தேடி வரும் கடை என்றால் அது விஞ்சை விலாஸ் தான், ஏன் சூட்டிங் வரும் நடிகர் நடிகைகள் கூட இங்கு வராமல் செல்ல மாட்டார்கள் என்று கூறுகிறார் அவர்.
4 மேஜைகள் மட்டுமே போடப்பட்டு நடத்தப்படும் இந்த எளிமையான சிறிய கடையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி தேடி வந்து சாப்பிட்டு செல்கின்றனர் என்றால் சாப்பிட்டின் தனி ருசியும், கலப்படமில்லாத வீட்டு முறை சமையலுமே என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு தனக்கென தனி அடையாளம் வகுத்து கொண்டவர்களே இன்றளவும் மக்கள் மனதிலும் தனி அடையாளத்துடன் தனித்து நிற்கின்றனர்.