பழைய இரும்பு போட்டு வைக்கும் குப்பை கூடமாக மாறும் தூத்துக்குடி உழவர் சந்தை - தலையீடுமா வேளாண்துறை?
தூத்துக்குடி உழவர் சந்தையில் தினமும் சுமார் 11 முதல் 13 டன் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.5 முதல் ரூ.5½ லட்சம் வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.
தமிழகத்தில் விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக கடந்த 1999-ம் ஆண்டு முதல் உழவர் சந்தை உருவாக்கப்பட்டது. இந்த உழவர் சந்தை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் உழவர் சந்தை உருவாகி உள்ளது. கடந்த காலங்களில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது. இந்த உழவர் சந்தைகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. உழவர் சந்தைகள் ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் 4 ஊழியர்கள் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகள் கிராமங்களில் இருந்து காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் கட்டணம் இன்றி தங்கள் விளைநிலங்களில் விளைவித்த காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். உழவர் சந்தையில் ஒவ்வொரு விவசாயிக்கும் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி உழவர் சந்தையில் 80 கடைகள் உள்ளன. உழவர் சந்தைகளில் கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பதை தடுக்க சந்தையில் உழவர் சந்தையில் நிர்ணயித்த விலைப்பட்டியல் பலகையும் வைக்கப்படுகின்றன. இதனால் அரசு நிர்ணயித்த விலையிலேயே காய்கறிகள் கிடைக்கின்றன. இதனால் உழவர் சந்தையில் மக்கள் அதிக அளவில் காலையிலேயே வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். தூத்துக்குடி உழவர் சந்தையில் 80 கடைகள் உள்ளன. இதில் 35 கடைகள் வரை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து காய்கறிகளும், குலையன்கரிசல், ஆத்தூர் பகுதிகளில் இருந்து வாழைத்தாரும் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் கூட்டுறவு உணவு உற்பத்தியாளர் சங்கம் மூலம் மலைக்காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தூத்துக்குடி உழவர் சந்தையில் தினமும் சுமார் 11 முதல் 13 டன் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.5 முதல் ரூ.5½ லட்சம் வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வரை உழவர் சந்தைக்கு வருகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் தூத்துக்குடி உழவர் சந்தை எரிந்து போன வாகனங்களும், உபயோகிக்க இயலாத அரசு வாகனமும் நிறுத்தி வைக்கப்படும் குப்பை கிடங்காக மாறி வருகிறது. மேலும் உழவர் சந்தை முழுமையிலும் அகற்றப்படாத மரங்கள் , குப்பைகள் என சுகாதார சீர்கேட்டிற்கு குறைவு ஒன்றும் இல்லாத நிலை உள்ளது என்கின்றனர் பொதுமக்கள். விலை குறைச்சலா கிடைக்கும் இங்க வந்தால் இங்க சுத்தம் என்பதே இல்லை என்கின்றனர்.
தூத்துக்குடி உழவர் சந்தை குப்பைக்கூடமாக மாறிவருவது குறித்து மக்கள் மேம்பாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மாடசாமியிடம் கேட்டபோது,தூத்துக்குடி உழவர் சந்தையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சந்தையில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் உழவர் சந்தையில் நுழைவு வாயிலில் நீண்ட நாட்களாக எரிந்த நிலையில் இரண்டு அரசு வாகனங்களும் அதே போல பயன்படுத்தாத ஒரு அரசு வாகனம் என மூன்று வாகனங்கள் காய்கறிகள் வாங்க வரும் நபர்களுக்கு இடைஞ்சலாகவும் இடையூறாகவும் இருந்து வருகின்றது.
மேலும் அந்தப் பகுதியில் சுகாதாரமற்ற நிலையில் குப்பைகள்குவிந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தக்கூடிய நிலை இருந்து வருகின்றது. ஆகவே மாவட்ட நிர்வாகமும் வேளாண்மை துறையும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையீடு செய்து எரிந்த நிலையில் இருக்கின்ற வாகனங்களை அப்புறப்படுத்தி தூய்மையான உழவர் சந்தையாக மாற்றி மக்கள் பயன்பெற வேண்டும் என்கிறார்.