Thoothukudi: தூத்துக்குடியில் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டிபிரிவு கட்டப்பட்டு வருகிறது.
![Thoothukudi: தூத்துக்குடியில் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு Thoothukudi Evaluation Committee examines government projects and activities in Tuticorin Thoothukudi: தூத்துக்குடியில் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/7f0969fe3cc1805c4ee8c6a769e3845f1689734207842739_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
கும்பகோணம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.அன்பழகன் தலைமையில் 2023-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குழு தலைவர் அன்பழகன் தலைமையில் குழு உறுப்பினர்களான காந்திராஜன் (வேடசந்தூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), சிந்தனை செல்வன் (காட்டுமன்னார்கோவில்), சிவகுமார் (மயிலம்), சேவூர் ராமச்சந்திரன் (ஆரணி), நாகைமாலி (கீழ்வேளூர்), பரந்தாமன் (எழும்பூர்), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) ஆகிய 10 எம்எல்ஏக்கள் குழுவில் இடம் பெற்றிருந்தனர். மேலும், அரசு செயலர் கி.சீனிவாசன், கூடுதல் செயலர் பா.சுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், பிரிவு அலுவலர் பாண்டிராஜ் உள்ளிட்ட அலுவலர்களும் உடன் வந்திருந்தனர்.
இந்த குழுவினர் முதலில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு அரசு மருத்துவமனைக்கு ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரிவாக ஆய்வு செய்த குழுவினர், பணியின் நிலை, முடியும் காலம் போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், பணிகளை குறித்த காலத்தில் தரமாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
தொடர்ந்து தருவைகுளம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு செய்த சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர், மீனவர் பிரிதிநிதிகளுடன் கலந்துரையாடினர். அப்போது மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என குழு தலைவர் அன்பழகன் உறுதியளித்தார்.
பின்னர் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாங்குளம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதை பார்வையிட்ட குழுவினர், அங்கு சமைக்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தனர். மேலும், உணவின் தரம் தொடர்பாக மாணவர்களிடம் கலந்துரையாடினர். பின்பு சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர், மாணவர்களுடன் கலந்துரையாடினர்.தொடர்ந்து தூத்துக்குடி அருகேயுள்ள தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் ஆய்வு செய்த குழுவினர், மீன் மற்றும் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தும் முறை, ஏற்றுமதி விபரங்களை கேட்டறிந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. குழுத் தலைவர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குழு உறுப்பினர்களில் சுரேஷ்குமார் மட்டும் பங்கேற்கவில்லை. மற்ற அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். மேலும், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை ஆகிய துறைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட மதிப்பீடுகள் குறித்து குழுவினர் விரிவாக ஆய்வு நடத்தினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)