ஸ்பிக் நிறுவனம் மூலம் அத்திமரப்பட்டி பாசன கால்வாய் ரூ.5 கோடியில் தூர்வாரும் பணி தொடக்கம்
வெள்ளப்பெருக்கினால் தூத்துக்குடி மாநகர் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அரசு நிதியில் இருந்து ரூ.12 கோடி மதிப்பீட்டில் கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் பாசன வாய்க்காலை ஸ்பிக் நிறுவன சமுதாய பொறுப்பு நிதியில் இருந்து ரூ.5 கோடி செலவில் 4 கி.மீ., தொலைவுக்கு தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட அத்திமரப்பட்டி பாசன வாய்க்கலை ஸ்பிக் நிறுவனம் தனது சமூதாய பொறுப்பு நிதியில் இருந்து ரூ.5 கோடி செலவில் தூர்வாரி கொடுக்க முன்வந்தது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கலந்து கொண்டு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய் கோரம்பள்ளம் கண்மாய் ஆகும். இந்த கண்மாய்க்கு ஓட்டப்பிடாரம், கயத்தாறு பகுதியில் இருந்து உப்பாறு ஓடை வழியாக காட்டாற்று வெள்ளமும், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் கால்வாய் வழியாக தாமிரபரணி தண்ணீரும் வருகிறது. கோரம்பள்ளம் கண்மாயை சுற்றி 16 கண் மடைகள் இருக்கின்றன. இதனை சுற்றி ஏராளமான வாழை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்தை பெருக்கும் வகையிலும், உப்பாறு ஓடையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் தூத்துக்குடி மாநகர் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அரசு நிதியில் இருந்து ரூ.12 கோடி மதிப்பீட்டில் கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் மூலம் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தூத்துக்குடி துறைமுகம் வரை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தண்ணீர் கடைமடை வரை செல்வதற்கும், வெள்ளக் காலங்களில் தண்ணீர் நிலங்களில் செல்லாமல் இருக்கவும் உப்பாற்று ஓடையின் பிரதான பாசன கால்வாயை தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் ஸ்பிக் நிறுவனம் மூலம் தனது சமூக பொறுப்பு நிதி ரூ.5 கோடி மதிப்பீட்டில் 4 கி.மீ. தூரத்துக்கு கால்வாயை தூர்வாரி கொடுக்க முன்வந்தது. இந்த பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், இதுபோல் ஆண்டுதோறும் தூர்வாருவதாக ஸ்பிக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 500 வாழை விவசாயிகள் பயன்பெறுவார்கள். இப்பணிகள் 2 வாரங்களில் முடிக்கப்படும். கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரும்போது கிடைக்கும் மண்ணை தூத்துக்குடி நகரில் பயன்படுத்தப்படாமல் உள்ள தொழில்துறை புறம்போக்கு இடங்களில் கொட்டுவதற்கு தொழில்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட லாரிகள் மூலம் மண் அங்கு எடுத்து செல்லப்படும். இந்த பணிகள் வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமையில் தொடங்கி அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெறும்.
விவசாயிகளின் ஒத்துழைப்போடு கோரம்பள்ளம் குளம் முழுமையாக தூர்வாரப்படும். இதனால் கோரம்பள்ளம் குளத்தின் நீர் கொள்ளவு அதிகரிக்கும். கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் மூலமாக உப்பாற்று ஓடையை தூர்வாருவது மட்டுமல்லாமால், ஓட்டப்பிடாரம் பகுதியில் ஓடையில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உப்பாற்று ஓடையில் வெள்ளம் ஏற்படுவது தடுக்கப்பட்டு நகர் பகுதிகள் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்" என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குநர் இ.பாலு, முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி அமிர்த கவுரி, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் ஜோதிமணி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.