திருச்செந்தூர் அமலிநகர் கடல் பகுதியில் விரைவில் தூண்டில் பாலம் - மாவட்ட ஆட்சியர் உறுதி
தமிழக அரசு சார்பில் கடலோர மண்டல மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் முடிவடைந்ததும், அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.
திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமம் அமலிநகர் ஆகும். இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 195 பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த கிராம கடற்கரையில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர் படகுகள், வலை பின்னும் கூடங்கள். கடலோரத்தில் உள்ள வீடுகள் சேதமடைந்து வந்தன. இதனால் அமலிநகர் கடற்கரையில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்க சட்டமன்றத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான மீன்வளத்துறை மானிய கோரிக்கையின் போது திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டடு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் தூண்டில் பாலம் அமைக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் விரைவாக தூண்டில் பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி அமலிநகர் மீனவர்கள் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 4-வது நாளாக நீடித்தது. அமலிநகரில் மீனவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜயராகவன், அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், ஊர்கமிட்டி தலைவர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும் போது, “அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்க சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடலோர மண்டல மேலாண்மை திட்டம் வகுத்த பிறகே கடலில் நிரந்தர அமைப்பு எதையும் ஏற்படுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது. இதனால் பணிகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசு சார்பில் கடலோர மண்டல மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் முடிவடைந்ததும், அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும். அமலிநகரில் நிச்சயமாக தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்ற விவரம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்று, கடலுக்கு செல்ல மீனவர்கள் சம்மதித்து உள்ளனர்” என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்