இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.38 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்கள் பறிமுதல் - க்யூ பிரிவு அதிரடி
காயல்பட்டினம் கடற்கரை வழியாக படகில் ஏற்றி இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டமாக அமைந்து உள்ளது. இந்த கடற்கரையை சமீபகாலமாக கடத்தல்காரர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், ஏலக்காய், கடல் அட்டை, வெங்காய விதை, கஞ்சா போன்ற பல்வேறு பொருட்களும் கடத்தப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் இருந்து பொருட்களை சிறிய படகுகளில் கடத்தி செல்பவர்கள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பெரிய படகுகளுக்கு பொருட்களை மாற்றி விடுகின்றனர். அந்த படகு மூலம் நடுக்கடலுக்குள் கொண்டு சென்று, கடலில் வைத்தே இலங்கையை சேர்ந்தவர்களிடம் பொருட்களை ஒப்படைத்துவிட்டு திரும்பிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து மருந்து பொருட்களை கடத்தி செல்வதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் இருந்து காயல்பட்டிணம் செல்லும் புறவழிச்சாலையில் க்யூ பிரிவு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 2 கார்களை மடக்கி சோதனை செய்தனர். அந்த கார்களில் 26 அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக போலீசார் அந்த அட்டை பெட்டிகளை பரிசோதனை செய்தனர்.
அதில் 100 மில்லி அளவு கொண்ட 2 ஆயிரத்து 500 பாரசிட்டமால் சிரப் பாட்டில்கள், ஒரு லட்சம் லேசிக்ஸ் மாத்திரைகள், 100 மில்லி அளவு கொண்ட 1000 மெட்ரோஜெல் மருந்து பாட்டில்கள், 1000 பிரிகேப் மாத்திரைகள், 1000 கர்ப்பம் குறித்த கண்டறியும் சாதனம், ஒரு செல்போன் ஆகியவை இருந்தன. இதன் இலங்கை மதிப்பு ரூ.32 லட்சம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் மருந்து பொருட்களையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த மருந்து பொருட்களை கடத்த முயன்றதாக ஆறுமுகநேரியை சேர்ந்த லட்சுமணன் மகன் ஜெயபாரதி ராஜா(வயது 36), இவருடைய தம்பி ஜெயபாரதி சாரதி(34), சங்கரலிங்கம் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் 3 பேரும் சென்னையில் உள்ள மொத்த மருந்து விற்பனை நிறுவனத்திடம் இருந்து மருந்து பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து காரில் கொண்டு வந்து உள்ளனர். பின்னர் காயல்பட்டினம் கடற்கரை வழியாக படகில் ஏற்றி இலங்கையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்டவர்களையும், கடத்தப்பட இருந்த மருந்து பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் க்யூ பிரிவு போலீஸார், மெரைன் போலீஸார் கண்காணிப்பு பணி, ரோந்து, வாகன சோதனை , பறிமுதல் , கைது என தொடர்ந்தாலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சிக்கல், அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடு போன்றவற்றை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு கடத்தல் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.