Watch video : சாமிக்கும், சிசிடிவி காட்சிக்கும் பயம்.. திருடிய ஆட்டை மீண்டும் கொண்டுவந்து விட்ட திருடர்கள்.. என்ன ஆச்சு?
”சாமிக்கு பயந்தும், மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்திலும் திருடிய ஆட்டை மீண்டும் கொண்டு வந்துவிட்டு சென்ற திருடர்களால் பரபரப்பு”
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது கோவில் அம்மாள்புரம், இப்பகுதியை சேர்ந்தவர் சுடலை கண்ணு, இவர் கோவிலுக்கு நேர்த்தி கடனாக ஆடு ஒன்றை வளர்த்து வந்து உள்ளார், காலை மேய்ச்சலுக்கு செல்லும் ஆட்டை மாலை வீட்டின் முன் உள்ள கம்பியில் கட்டி போடுவது வழக்கம், இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது முகத்தை மறைத்து கொண்ட இருவர் இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளுடன் வந்து ஒருவர் ஆட்டை தூக்கி பின்னால் வைத்து உட்காரவே மற்றொருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்று விடுகிறார்.
காலை எழுந்து பார்த்தபோது கட்டப்பட்டிருந்த ஆடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் சுடலைக்கண்ணு, பின்னர் சுற்றிலும் தேடியும் எங்கேயும் ஆடு கிடைக்காத நிலையில் அருகில் இருந்த சிசிடிவி காட்சியில் ஆடு திருடு போயிருந்ததும் ஆட்டை இருவர் பைக்கில் தூக்கி செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது, இதனடிப்படையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்,
சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையிலும், அந்த ஆடு கோவிலுக்கு நேர்த்திக்கடனாக அவர் வளர்த்து வந்தார் என்பதும் சமூக வலைதளங்களில் வெளிவர அது திருடர்களுக்கு தெரிய வந்துள்ளது, இந்த நிலையில் பதறிப்போன திருடர்கள் கோயிலுக்கு நேர்த்தி கடனாக வளர்த்த ஆடு என்பதாலும், சிசிடிவி காட்சிகளால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்திலும், நேற்று முன் தினம் அதிகாலையில் கோவிலம்மாள் புரத்தில் உள்ள சுடலை ஆண்டவர் கோவிலில் ஆட்டுக்கு கொம்புகளில் மலர்களை சுற்றி அதனை கோவிலில் விட்டு சென்றுள்ளனர்.
பழக்கப்பட்ட ஆடு என்பதால் கொம்பில் மலர்கள் சுற்றப்பட்டு காலை சுடலை கண்ணு வீட்டிற்கு வந்து சேர்ந்தது, தான் வளர்த்த ஆடு திடீரென வீட்டின் முன் வந்து நிற்பதை கண்ட சுடலைக்கண்ணு மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைத்து போனார், சாமிக்கு பயந்தும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்திலும் திருடிச் சென்ற ஆட்டை மீண்டும் திருடர்கள் கொண்டு வந்து விட்டு சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
நெல்லை களக்காட்டில் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் - சிசிடிவி காட்சி வெளியானதால் மாட்டிக் கொள்ளும் அச்சத்தில் கோவிலில் ஆட்டை விட்டு சென்ற திருடர்களால் பரபரப்பு @abpnadu @imanojprabakar @SRajaJourno pic.twitter.com/VOdUDjanN4
— Revathi (@RevathiM92) March 19, 2022