பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பல முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததுடன், முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவுகளையும் புறக்கணித்ததால், அவருக்கு $1.07 பில்லியன் தொகையை திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட ஆவணங்களை முறையாக சமர்பிக்காததால் பைஜூ நிறுவனருக்கு 9,591 கோடிக்கு ஆபராதம் விதித்துள்ளது.
₹9,591 கோடி அபராதம்:
பைஜூவின் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் அமெரிக்க திவால்நிலை நீதிமன்றத்திலிருந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார். பல முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததுடன், முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவுகளையும் புறக்கணித்ததால், அவருக்கு $1.07 பில்லியன் (தோராயமாக ₹9,591 கோடி) தொகையை திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏன் இந்த கடுமையாக நடவடிக்கை?
நவம்பர் 20 அன்று, டெலாவேர் திவால்நிலை நீதிபதி பிரெண்டன் ஷானன், பைஜூஸின் அமெரிக்க நிதிப் பிரிவு Byju’s Alpha நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்கும் மறைத்ததற்கும் பொறுப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பைஜூஸ் ஆல்பா, தனிப்பட்ட வணிகச் செயல்பாடுகள் எதுவும் இல்லாத ஒரு சிறப்பு நோக்க வாகனம் (SPV) ஆகும். பைஜூவுக்காக உலகளாவிய கடன் வழங்குநர்களின் ஒரு குழுமத்திலிருந்து $1.2 பில்லியன் காலக்கெடுவுள்ள கடனை திரட்டுவதற்காக இதை உருவாக்கினர்.
இந்த விவகாரம் எப்படி நீதிமன்றத்தை சென்றடைந்தது?
பைஜூஸ் ஆல்பாவிலிருந்து $553 மில்லியன் என்ற பெரிய தொகை மாற்றப்பட்டதால் சந்தேகம் எழுந்தது. இந்தப் பணம் முதலில் மியாமியை தளமாகக் கொண்ட Camshaft Capital என்ற ஹெட்ஜ் நிதிக்கு மாற்றப்பட்டது.அங்கிருந்து மீண்டும் பைஜூ மற்றும் மற்ற தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.இந்தச் செயல்பாட்டில் பைஜூ ரவீந்திரன் நேரடியாக ஈடுபட்டதை நீதிமன்றம் கண்டறிந்ததால், அவருக்கு எதிராக கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு
நீதிமன்றம் பைஜூ ரவீந்திரனுக்கு Byju’s Alpha நிதிகளின் முழுமையான கணக்காய்வை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இதில் Camshaft Capital-க்கு சென்ற $533 மில்லியன்,அந்த முதலீட்டில் உருவான வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை வட்டி,பிற தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளின் விவரங்களும் அடங்கும்.
நீதிமன்றம் உத்தரவிட்ட அபராதத்தை பைஜூஸ் உடனடியாக செலுத்தத் தேவையில்லை. இருப்பினும், இது ரவீந்திரனுக்கு மிகப்பெரிய சட்ட மற்றும் நிதி சுமையாகும். இந்த உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்யாவிட்டால், அவர் அதை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.






















