மாநகராட்சி ஆணையருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய தி.மு.க. பெண் கவுன்சிலர் - நெல்லையில் பரபரப்பு
மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அரசால் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலரே போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
மேயரின் ஆதரவு கவுன்சிலராக கருதப்படும் ஏழாவது வார்டை சேர்ந்த பெண் கவுன்சிலர் இந்திரா தனது வார்டு பகுதியில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நூதன போஸ்டரை அடித்து மாநகரின் பல பகுதிகளில் சுவர்களில் ஒட்டியுள்ளார். குறிப்பாக அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத நெல்லை மாநகராட்சிக்கு நன்றி என போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுங்கட்சி கவுன்சிலர்:
அதில் அவர் ஏழாவது வார்டு மக்களை வஞ்சிக்கும் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு நன்றி. பலமுறை சாலை வசதி செய்து தர கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நன்றி, தெருக்களில் பாலங்கள் போட்டு தரச் சொல்லியும் அதை போடாமல் இருக்கும் மாநகராட்சி ஆணையருக்கு நன்றி, உப்புதண்ணீர் டேங்க் வைக்க பலமுறை வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பதற்கு நன்றி.
சொந்த ஊரில் அகதிகளாக எந்த வித அடிப்படை தேவையும் இல்லாமல் எங்களை வாழ வைக்கும் எங்களுடைய எந்த ஒரு கோரிக்கைகளையும், எங்களின் கஷ்டங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாநகராட்சி ஆணையாளருக்கும் மிக்க நன்றி ஏக்கத்துடன் எம்கேபி நகர் ஊர் பொதுமக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
போஸ்டர்:
இந்த போஸ்டர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது, மேலும் 7வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகரில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டிடங்கள் ஆபத்தாக இருப்பது குறித்து பலமுறை ஆணையருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அது தனியாக போஸ்டர் அடித்தும் ஒட்டியுள்ளனர். அதில் ஆபத்து ஆபத்து குழந்தைகளுக்கு ஆபத்து. தனியார் பள்ளிக்கு நிகராக கல்வியும், தரமான உணவும் வழங்கும் நிலையில் 7 வது வார்டு மனக்காவலம் பிள்ளை நகர் பிராந்தான் குளம் காமராஜர் தெருவில் உள்ள ஊராட்சீ ஒன்றிய நடு நிலைப்பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, குழந்தைகளின் நலனில் முக்கியத்துவம் காட்டாத நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் அலட்சியப் போக்கிற்கு தீர்வு கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யுமா? முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என கூறியும் பெண் உறுப்பினர் என்ற அடிப்படையில் கோரிக்கைகளை ஏற்க மறுக்கின்றனரா என அச்சிடப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அரசால் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலரே போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா சார்பில் ஊழல் மாநகராட்சியை கலைத்திடு என்று போஸ்டர் அடித்து மாநகரின் முக்கிய பகுதியில் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்