முதல்வருக்கும் எனக்கும் உள்ள பிரச்னை அண்ணன் தங்கை பிரச்னை தான் - ஆளுநர் தமிழிசை
மற்ற நாடுகளை இந்தியா சார்ந்து இருந்த நிலை மாறி இந்தியாவை மற்ற நாடுகள் சார்ந்திருக்கும் நிலை உருவாகி வருகிறது.
நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித்திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதி சுவாமி நெல்லையப்பர் சன்னதி உள்ளிட்ட கோவில்களில் உள்ள பல்வேறு சன்னதிகளில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் பொழுது, “இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்களோடு கூட்டமாக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா என்ற பெரும் பேரிடர் மக்களிடம் இருந்து அகற்றப்படுவதற்கு பெரும் ஆயுதமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மிகவும் உதவிகரமாக இருந்தது. மத்திய அரசு எல்லா பகுதி மக்களும் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயலாற்றி வருகிறது. சமீபத்தில் பாரத பிரதமரின் வெளிநாட்டு பயணம் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயணம். இந்த பயணத்தால் நம் நாட்டின் பெருமை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள தலைவர் உலகத்தலைவராக மாறி இருக்கிறார்.
இதுவரை இல்லாத வளர்ச்சியை புதுவை பார்த்துக்கொண்டிருக்கிறது.13 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்ததை விட 2 ஆயிரம் கோடி அதிகமாக கிடைத்துள்ளது. தமிழகத்தில் 1000 ரூபாய் பெண்களுக்கு கொடுப்போம் என்பது இன்னும் வாக்குறுதியில் தான் இருக்கிறது. இரண்டு வருடம் ஆகியும் கால அவகாசம் கொடுத்துள்ளனர். கொரானா நேரத்தில் பணியாற்றிய செவிலியர்களை நிரந்தரப்படுத்துவதில் சில பிரச்சினை இருக்கிறது. தமிழ்நாட்டிலும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை முற்றிலுமாக புறம்தள்ளவில்லை. உயர்நீதிமன்றமே பணி நியமான ஆணை தொடர்பாக தடை ஆணை விதித்துள்ளது. நேரடியாக எடுக்க முடியாது. தகுதியின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என்று. அதனால் சில பிரச்சினைகள் வருகிறதே தவிர இதில் ஆளுநரின் அழுத்தம் எங்கேயும் இல்லை, முதல்வருக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை அண்ணன் தங்கை பிரச்சனை தான். வேறு எந்த பிரச்சினையும் இல்லை, சிறு சிறு சுணக்கம் வரலாம். ஆனால் நான் மத்திய அரசின் சில வழிகாட்டு முறைகள், நீதிமன்றத்தின் சில வழிகாட்டு முறைகளை தான் பின்பற்ற முடியும், அவர் அண்ணன் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் சில வழிகாட்டு முறைகள் கிடையாது, நீதிமன்ற வரையரைகளும் கிடையாது. அதே முறையில் மக்கள் எதிர்பார்க்கிறார்களே என்ற ஆதங்கம் தான் அவருக்கு இருக்கே தவிர எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. அதிகாரிகள் சிலர் தாமதப்படுத்தலாம். ஆனால் அதை விரைவுப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
பாரத பிரதமர் பெஸ்ட் புதுச்சேரி என சொல்லி இருந்தார். நான் அதை ஃபாஸ்ட் புதுச்சேரியாக இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சொல்லி வருகிறேன். ஏனென்றால் அனைத்து கோப்புகளும் விரைவாக நகர வேண்டும், நான் எந்த கோப்புகளுக்கு இதுவரை தடை விதித்ததில்லை. 1500 கோப்புகளுக்கு கையெழுத்திட்டு இருக்கிறேன். அதனால் புதுவை மக்களுக்கும் அண்ணணுக்கும் எனது வேலை தெரியும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான் பக்தையாக சென்று சுவாமி தரிசனம் செய்யும்போது கூட பூஜைகள் நடக்கிறது என்று சொல்லி சுவாமி தரிசனம் செய்வதில் சில பிரச்சனைகள் இருந்தது. அரசும், தீக்ஷதர்களும் அமர்ந்து பேசி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நடராஜர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட்டை ஏவுதலத்தின் மூலம் 10 முதல் 15 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வாய்ப்பிருக்கிறது.
தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளராக தான் போட்டியிட்டபோது தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் கொண்டு வருவேன் என அறிவித்தேன். அதனை பலரும் கேலி கிண்டல் செய்தனர். தற்போது ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் இருந்தும் வந்தே வாரத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 86,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இளைஞர்கள் வேலை கொடுக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். இந்திய பொருளாதாரம் ஐந்து ட்ரில்லியன் டாலருக்கு 2025-ல் உயரும் என உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். மற்ற நாடுகளை இந்தியா சார்ந்து இருந்த நிலை மாறி இந்தியாவை மற்ற நாடுகள் சார்ந்திருக்கும் நிலை உருவாகி வருகிறது என அவர் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்