தென்காசி பெரியகோவில் தேரோட்டம் குறித்த இருவேறு அறிவிப்புகள் - குழப்பத்தில் பக்தர்கள்
தேரோட்டம் நடக்குமா ? இல்லையா என்ற குழப்பம் பக்தர்களிடையே ஏற்பட்டிருப்பது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி தலைநகரான தென்காசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் சிவாலயம், இதனை உலகம்மன் கோவில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைப்பதுண்டு, குறிப்பாக இக்கோவில் 1445 ஆம் ஆண்டு அப்போது தென்காசி யை ஆண்ட பராக்கிரமம் பாண்டியன் என்ற மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு கிபி 1446 இல் கட்டி முடிக்கப்பட்டது. 180 அடி கோபுர உயரம் கொண்டு கட்டப்பட்ட இக்கோவிலில் 8 விநாயகர் கோவில்களையும், 8 திருமடங்களை அமைத்தார். மேலும் இக்கோவிலின் கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசிக் கொண்டே இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இக்கோவிலின் மூலவர் காசிவிஸ்வநாதர், தாயார் உலகம்மை ஆவர். இக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி பெரும்திருவிழா ஆகிய இரண்டு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இக்கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனித்தனி தேர்கள் உள்ளன. திருவிழாவின் போது சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி தேர்களில் வீதி உலா வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படும்.
இந்த நிலையில் தற்போது ஐப்பசி திருவிழா நடக்க உள்ள நிலையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடத்தப்படாது என கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து கோவிலின் முகப்பிலும், தேரிலும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் அம்பாளின் தேர் மிக பழுது அடைந்த நிலையில் கடந்த 3 தேரோட்டத்தில் கயரை இழுத்து கட்டி ஒட்டப்பட்ட நிலையிலும் திருக்கோவில் தேர் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் வலம் வந்து உள்ளது. தேர் உள்கூடு பகுதியில் மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருப்பதால் தற்போது தேரினை நடத்த இயலாத சூழ் நிலையில் உள்ளது. மேலும் தேர் ஸ்தபதி சுரேஷ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடத்துவதற்கு தகுதி இல்லை என்று கருத்துரை வழங்கினார். எனவே புதிய தேர் செய்வதற்கு தொடர் நடவடிக்கையில் இருந்து வருகிறது. குடமுழுக்கு முன்பாக புதிய தேர் செய்து வெள்ளோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஆகையால் இந்த வருடம் தேர் வடம் பிடித்தல் நடைபெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தேர் பழுதடைந்த நிலையில் இயக்கப்பட்டதாக கோவில் நிர்வாகமே வெளிப்படையாக அறிவித்திருக்கும் நிலையில் அப்படியானால் கடந்த 3 ஆண்டுகளாக பழுதுபட்ட தேரை பாதுகாப்பற்ற சூழலில் எப்படி இயக்கினார்கள் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று சொல்லும் பக்தர்கள் தற்போதைய அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க ஆனந்த கூத்தனூர் அறக்கட்டளை என்று அமைப்பின் பெயரில் இந்த ஆண்டு தேரோட்டம் நடக்கும் என கோவிலின் முகப்பில் ஒரு போர்டு வைக்கப்பட்டது. வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கோவில் நிர்வாகம் அதனை அகற்றி விட்டது. இன்னொரு புறம் திருவிழா குறித்து கோவில் நிர்வாகம் தயாரித்த அழைப்பிதழில் ஒன்பதாம் திருநாளான நவம்பர் 7ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் என்ற நிகழ்ச்சி நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தேரோட்டம் நடக்குமா இல்லையா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது? அதோடு இருவேறு முரண்பட்ட தகவல்களை அளித்துள்ள கோவில் நிர்வாகத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாலாலயம் என்னும் முதற்கட்ட பணிகள் நடத்தப்பட்டால் இந்த ஆண்டு திருவிழா கோவிலுக்குள் மட்டும் எளிமையாக நடத்தப்படும் என்றும் தெரிகிறது. இருப்பினும் முறையாக அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட வேண்டும் என பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.