தென்காசி: இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது ராமநதி அணை..! வெள்ள அபாய எச்சரிக்கை..!
கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழையின் மூலம் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்று அணை நிரம்பியது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கடைய வட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மூலம் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு கடந்த 16ஆம் தேதி அணை அதன் முழு கொள்ளளவு எட்டி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தொடர்ந்து கார் பருவ பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழையின் மூலம் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்று அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டம் 82 அடியில் நிலை நிறுத்தப்பட்டு அணைக்கு வரக்கூடிய நீர் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் உபரிநீராக ஆற்றில் திறக்கப்பட்டது. அணை பாதுகாப்பு பணியில் உதவி பொறியாளர் கணபதி தலைமையில் அணை ஊழியர்கள் ஜோசப், பாக்கியராஜ், துரைசிங்கம் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால் ராமநதி கரையோரம் கிராமங்களான கடையம், கீழ கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், பாப்பான்குளம் பகுதி சேர்ந்த மக்கள் எவரும் நதி செல்லும் நீர் வழித்தடத்தில் நீராடுவதற்கோ, துணிகளை துவைப்பதற்கு, ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
அதே போல 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையும் தனது முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 78 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் தற்போது 77 அடி நீர் இருப்பும், 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் 52.17 அடி நீரும், 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 117 அடி நீரும் இன்றைய நிலவரப்படி உள்ளது.