காதல் திருமணம்.. பெற்றோர்களால் கடத்தல்... நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்த இளம்பெண்..! நடந்தது என்ன?
நீதிபதி சுனில் ராஜா முன்னிலையில் தனி அறையில் ஆஜாராகி தனது தரப்பு இரகசிய வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதில் தான் யாரிடம் செல்ல வேண்டும் என்பது குறித்து பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
தென்காசி அருகே பிரானூர் பார்டரில் வசித்து வருபவர் நவீன் பட்டேல். இவரது மகள் கிருத்திகா பட்டேல். இவரும் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மகன் வினித் என்பவரும் காதலித்து வந்த நிலையில் டிசம்பர் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேல் கடந்த 25ம் தேதி அன்று அவரது பெற்றோர்களால் கடத்தப்பட்டார்.
அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே காதல் மனைவி கடத்தப்பட்டது குறித்து காதல் கணவர் வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார், இந்த நிலையில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அதன் பின்னர் கிருத்திகா தொடர்ந்து தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், பணம் கேட்டு காதல் கணவர் வீட்டில் மிரட்டுவதாகவும் பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு இருந்தார்,
மேலும் வினித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில் கிருத்திகா பட்டேலை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். பின் கடந்த செவ்வாய் கிழமை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு கிருத்திகா பட்டேலை தென்காசி காவல்துறையினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தரப்பு விளக்கம் அளிக்கும் வகையில் கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்கு மூலம் பெற வேண்டும். மேலும் விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன் பெயரில் தென்காசி - குற்றாலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒன் ஸ்டாப் காப்பகத்தில் மூன்று தினங்களாக கிருத்திகா பட்டேல் தங்கி இருந்த நிலையில் நேற்று செங்கோட்டை நீதிமன்றத்தில் கிருத்திகா ஆஜராகினார். நீதிபதி சுனில் ராஜா முன்னிலையில் தனி அறையில் ஆஜாராகி தனது தரப்பு இரகசிய வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதில் தான் யாரிடம் செல்ல வேண்டும் என்பது குறித்து பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் திங்கள்கிழமை அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையானது தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரம் 15 நிமிடம் விளக்கம் அளித்த நிலையில் மீண்டும் கிருத்திகா குற்றாலம் அருகில் உள்ள காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சமர்பிக்கப்படும் அறிக்கையை பொறுத்தே இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு தெரிய வரும்.